top of page

இமயத்தின் இமயங்கள் - 2

Writer's picture: P SivalingamP Sivalingam

Updated: Mar 4, 2019



திடீரென பயங்கர வெடி சத்தம்...

நாங்கள் அனைவரும் பயந்து, என்ன நடக்கிறதென்று தெரியாமல் பதறிப் போய்விட்டோம்.


பிறகு வெளியில் பார்த்தால், பட்டாசை சாலையில் வைத்து வெடித்துக்கொண்டிருந்தனர்.


குறிப்பாக மகிழ்வுந்தின் இடப்புறம் அமர்ந்திருந்த ஆதியும், கிரியும் வெடி சத்தத்தில் திடீரென கீழே குனிந்து ஒளிந்து கொண்ட விதம், எங்களுக்கு அடக்க முடியாத சிரிப்பலையாக மாறியது ஏனென்றால் சிறு நேரத்திற்கு முன்புதான் இதைப்பற்றி பேசிக்கொண்டிருந்ததால் இதன் சுவாரசியம் முற்றியது.


செல்லும் வழியிலே பசி ஆட்கொள்ள, அசைவ உணவகத்தை நோக்கி படையெடுத்தோம். நன்கு திருப்தியாக குறைந்த விலையில் அசைவ உணவாக , கோழி வறுவல், காஷ்மீர் ஆட்டுக்கறி மற்றும் ரொட்டி என அன்றைய நாள் முழுவதுக்கும் சேர்த்து உண்டோம்.


அது தான் நாங்கள் உண்ட திருப்தியான உணவு. அடுத்த எட்டு நாட்களில் அதுபோன்ற உணவு கிடைக்காது என அப்போது எங்களுக்குத் தெரியாது.


மாலையில் தால் ஏரியை அடைந்ததும் எண்ணற்ற படகுகளைக் காண முடிந்தது.


சுற்றுலா சவாரிக்காக நன்கு அலங்கரிக்கப்பட்ட, மெத்தையுடன் கூடிய சிறிய ரக படகுகளும், இரவில் தங்குவதற்கான பெரிய ரக படகுகளும் இருந்தன.


நாங்கள் முதல் நாள் இரவு தங்குவதற்கு இணையத்தில் முன்பதிவு செய்திருந்தோம். அங்கு சாலையில் இருந்து தங்கும் படகிற்கு செல்ல சிறிய படகில் நூறு மீட்டர் தூரத்தை கடந்தோம்.


படகுக்காரரோ நாங்கள் முன்பதிவு செய்த அழகான படகினை தராமல் அருகிலிருந்த சுமாரான படகினை காண்பித்து அதில் ஆறு பேரும் தங்கி கொள்ளுமாறு கூறினார். காரணம் அதில் நான்கு பேரும் தங்குவதற்கு அறைகள் இல்ல. இல்லையென்றால் ஒவ்வொரு படகில் மூன்று பேராக தங்கிக்கொள்ள சம்மதித்தார்.


அதாவது நல்ல நிலையில் உள்ள படகுகளின் புகைப்படங்களை வைத்து இணையத்தில் வரும் முன்பதிவுகளை பெற்றுக்கொண்டு, அவர்கள் வந்தவுடன் அது இல்லை, இதுதான் என்று பேரம் பேசுவது எங்களுக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பிறகு முன்பதிவு செய்த அறைகளை தற்காலிகமா வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலையில் விற்பது அவர்களது குறிக்கோள் .


பிறகு அனைவரும் அவர்கள் கூறியது போலவே வேறொரு படகில் தங்கினோம்.


அதற்காக விலையும் குறைத்து பேசப்பட்டது.


எங்கள் குழுவில் இந்தி மொழி அண்ணன் பழனிக்கு கிரிக்கும் சரளமாக பேச தெரிந்திருந்ததால் இது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க ஏதுவாக இருந்தது.


சிறுது ஓய்விற்குப் பிறகு, தால் ஏரியை சுற்றி பார்க்க சிறிய படகில் சென்றோம். அதுவும் ஒரு நபருக்கு ரூபாய் 200 சொல்ல, இந்தியில் பேரம் பேசி பேசி பாதியாகக் குறைக்கப்பட்டது .


இரண்டு மணி நேரம் பயணம். துடுப்பு கொண்டு மட்டுமே இயங்கும் படகு மிக மெதுவாக சென்றது.


அசைவ உணவு, அலங்கார பொருட்கள், காஷ்மீரத்தின் பாரம்பரிய உடைகள் என மிதக்கும் சந்தைகளை அங்கு காண முடிந்தது. இது எங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது.




இதற்கு முன்னர் கிழக்கு ஆசிய நாடுகளில் மிதக்கும் சந்தைகளை இணையத்தில் பார்த்தது நினைவில் வந்து சென்றன.




அவ்வாறே படகு சவாரி ஆனந்தமாகச் செல்ல , மாலை ஏழு மணியாகியும் சூரியன் மறையவில்லை. இரவு 8.00 மணி வரை வெளிச்சம் இருந்தது மிகவும் ஆச்சர்யத்தை உண்டாக்கியது.


அதன் பின்னர் இங்கே புகழ் பெற்ற பாதாம் தேநீர் அருந்தி, படகோட்டியிடம் தால் ஏரி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை கேட்டுப்பெற்றோம்.


இங்கு குளிர் காலத்தில் ஏரி உறைந்து விடுவது வழக்கமான ஒன்று. அப்போது மேற்பரப்பில் பனிக்கட்டிகளை துடுப்பினால் உடைத்து கிடைக்கும் குறுகிய வழியில் செல்வோம் என்றார். ஏனென்றால் ஏரியின் நீர் முழுவதும் உறைவதில்லை , அதன் அடிப்பரப்பில் குளிர்ந்த நீரே இருக்குமாம். இந்த ஏரியின் மொத்த சுற்றளவு சுமார் 35 கிலோமீட்டர். மீன் பிடித்தல் மற்றும் படகு சவாரி மட்டுமே பிரதான தொழிலாக இருக்கின்றது.



இரவு நேரத்தில் படகு வீடுகளின் வண்ணமயமான மின்விளக்குகுகள் நீரில் பட்டு எதிரொளித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

படகு சவாரியின் போது நடு விரல் மற்றும் மோதிர விரலையே புகைப்படம் எடுக்க உதவின.


இதனால் ஆட்காட்டி விரலின் வலி பன்மடங்காக உயர்ந்து, விட்டு விட்டு வலி விரலை இழுத்தது.


இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, இரவு உணவு உண்பதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தோம்.


சாலை முழுவதும் இரு சக்கர வாகனங்களை தாறு மாறாக ஓட்டிக்கொண்டு வெடிகளை வெடிக்கச் செய்ததும், எங்களுக்கு ஒருவித கலவர பூமியாகவே, காஷ்மீர் தெரிந்தது.


வலிக்கு நிவாரணம் கிடைக்க மருந்தகத்தை நோக்கி கண்கள் பாய்ந்தது. சுமார் 2 கிலோமீட்டர் நடந்து சென்றும், கிடைக்கவில்லை.


அனைத்து கடைகளும் மூடிய நிலையே...!


இறுதியாக பசிக்குப் பழங்களை வாங்கிக்கொண்டு, வரும் வழியில் எதேச்சையாக ஒரு மருந்தகம் தென்பட, அங்கு சென்று வீங்கிய கை விரலை காட்டி , கிடைத்த வலி நிவாரணி மாத்திரையை பெற்றுக்கொண்டு, மகிழ்வுடன் சென்றேன்.


வரும் வழியில், வாங்கிய அப்ரிகாட் பழங்களை உண்டுகொண்டே, இரவு உணவை வாங்கிக்கொண்டு, படகை அடைந்தோம்.


இங்கு போஸ்ட்பெய்டு (ஏர்டெல் மற்றும் BSNL) தொலைபேசி எண்கள் மட்டுமே இயங்கும். ஆதலால் காஷ்மீர், லே செல்லும் போது இதை கருத்தில் கொள்ள வேண்டும்.


பிறகு, படகில் உணவு உண்ட பின்னர், மாத்திரையை சாப்பிட்டு உறங்கச்சென்றோம். இவ்வாறாக பயணத்தின் முதல் நாள் முடிந்தது.


இரண்டாம் நாள் காலை 5 மணிக்கே வெளிச்சம் புகுந்து என்னை எழுப்பியது .


எழுந்து வெளியே வந்து அமைதியான தால் எரியும், அதன் பின்புறம் இருந்த மலை முகடுகளும் அற்புதமான இயற்கை காட்சியை எங்களுக்களித்தன.


முந்தய நாள், படகுகள் மற்றும் மிதக்கும் சந்தையினால் பரபரப்பாக இருந்த ஏரி இப்போது அமைதியான ஒரு தருணத்தை தந்தன.


அழகான வண்ண மலர்களைத்தாங்கிய படகுகளும், எங்கள் படகு வீட்டின் முன்பே செல்ல ஆரம்பித்தது.




இரண்டாம் நாள் பயணம், காஷ்மீரிலிந்து திராஸ் சென்று, இரவு தங்கி, மறுநாள் லே செல்வதாக திட்டம்.


படகு வீட்டிலிருந்து கரையை அடைந்தோம்.


அங்கே சில கைவினை பொருட்கள், தோலிலான பைகள், காஷ்மீரின் பாரம்பரிய உடைகள், பாசிகள் என வியாபாரிகள் நம்மை சூழ்ந்து கொண்டு, விலைகளை இரட்டிப்பாக கூறி அதன் பின்னர் உண்மையான விலைக்கு விற்றனர். அங்கு வாங்கிய பைகள், பாசிகள் நம்மூர் விலைகளை விட குறைவாகவே இருந்தன.

காலை 7 மணி அளவில் எங்களது பயணம் தால் ஏரியை சுற்றிக்கொண்டு லே செல்லத் தயார் ஆனோம்.


சுமார் 35 கிலோமீட்டர் சுற்றளவை கொண்ட ஏரியை அதன் சுற்றளவில் பாதியைச் சுற்றி கார்கில் சாலையை அடைந்தோம். ஏரியை ஒட்டிய சாலையில், காலைக்கதிரவனின் கீற்று ஒளியில் மீன்பிடிப் படகுகள் ஜொலித்தன .


நாங்கள் தங்கியிருந்த படகுவீடு, பிரதான சாலையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருந்ததே பிரமிக்க வைத்தன.


ஆனால் இக் காலை வேலையானது அதன் மொத்த சுற்றளவையும் காண வைத்தது.


படகு சவாரி மற்றும் படகு வீடானது ஏரியில் மொத்த பரப்பில் சுமார் 4 விழுக்காடே..! மற்ற இடங்கள் மக்கள் வாழிடமாகவும், மீன்பிடி இடமாகவும் பயன்படுகிறது.


பிறகு வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பி, எல்லையோர கிராமங்களின் அழகையும் , நெல் வயல்களின் பசுமையும் தேனி மாவட்டத்தைக் கண் முன் நிறுத்தின.


அவ்வாறே செல்லும் வழியில் சிந்து நதியை கடக்க நேரிட்டது. பனிமலைகள் உருகி, மூன்று நாடுகளை ஏறத்தாழ 20 துணை நதிகளோடு கடந்து, பல்லாயிரக்கணக்கான வாழ்வாதாரங்களை செழிப்படைய வைத்து, இறுதியாக அரபிக்கடலில் சங்கமிக்கின்றது.


இதன் தோற்றம் சீனாவில் இருந்தாலும், இந்தியாவின் வழியாக இமயமலையில் பல மலைத்தொடர்களை கடந்து, காஷ்மீர் மற்றும் பஞ்சாப்பை செழிக்க வைத்து, பாகிஸ்தான் செல்கிறது. இந்நதியின் மொத்த பயண தூரத்தில் 93விழுக்காடு பாகிஸ்தானில் மட்டுமே..! ஆதலால் இது அவர்களின் தேசிய நதி.


அதனைத்தொடர்ந்து செல்ல, காலை பசி வயிற்றை உருட்டியது. ஆதலால் சாலையோர கடைகளை நோட்டமிட்டபடி சென்று கொண்டிருந்தோம்.


இறுதியாக, ஒரு சாலையோர உணவகத்தில் வாகனத்தை நிறுத்தி, பூரியும் , ரொட்டியும் சொல்ல, அரைமணி நேரம் கழித்து வந்தது.

காத்திருந்த வேளையில், இரு சிறுவர்கள் சாலையிலிருந்து ஒரு பெட்டியில் ஏதோ எடுத்து வந்து எங்களிடம் நீட்ட, சிவப்பு நிறத்தில் பளபளப்பான செர்ரி பழங்கள். விலையை விசாரிக்க, 1 கிலோ 120 ரூபாய் என்றனர். நண்பர்கள் சிலர் ரூபாய் 100 என்று குறைத்துக் கூற, இறுதியாக நாங்களே சிறுவர்களுக்காக 120 ரூபாய் கொடுக்க, குதூகலத்துடன் விடைபெற்றனர்.


பழத்தின் சுவை மிகுதியாலும், காலை பசியாலும் ஆறு நபர்களுக்கு அது விரைவாக தீர ஆரம்பித்தது.


இன்றைய பயணத்தின் மற்றோரு சிறப்பு என்னவென்றால், இது

தேசிய நெடுஞ்சாலை எண் 1.


நெடுஞ்சாலைப் பயணங்கள் என்றால், நிழல்களற்ற சாலையில் அரளிச்செடிகளுக்கிடையே மிக வேகமாய்ச் செல்லும் மகிழ்வுந்துகளும், மிதமான வேகத்தில் செல்லும் சரக்கு வாகனங்களும், அடிக்கடி வரும் சுங்கச்சாவடிகளும், குறைவான தரத்தில் பன்மடங்கு விலையோடு இருக்கும் உணவகங்களே நம் மனதில் இருப்பவை.


ஆனால் தேசிய நெடுஞ்சாலை எண் 1 வழியானது, மேற்கூறியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மிதமான வேகம், வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள், மாசற்ற சூழல், குறைந்த வெப்பநிலை, விண்ணை முட்டும் மலைகள், கூடவே வரும் சிந்து நதி, மிளிரும் பனிமலைகள் என நமது மனதைக் கொள்ளையடித்துச் செல்கிறது இந்த இமயத்தின் இமயங்கள்.


அதன் பின்னர், காலை வேலை பயணம் இமயத்தின் அழகை கண்களுக்கு விருந்தாக்கியது. எவ்வாறென்றால், பசுமையான புல்வெளி, ஊசியிலை பைன் மரங்கள், அருகிலிருக்கும் மலைகள், தூரத்திலிருக்கும் பனிமலைகள், அதன் மேலே வெண்மேகம், அதன் பின்னே நீல வானம்....இதுதான் சோனமார்க் பகுதியின் எழில்மிகு தோற்றம்.



இதுவே குளிர் காலங்களில் இவை அனைத்தும் வெண்மையான பனிகளால் சூழப்பட்டு அழகுறுகின்றன. வாகன ஓட்டத்தில், இந்த அருமையான காட்சிகள் அனைத்தும் ரசித்துக்கொண்டே புகைப்படமும் எடுத்துக்கொண்டு எங்கும் நிற்காமல் சென்றோம்.



பிறகு பல்டல் பகுதியை அடையும் போது சிந்து நதி பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கில் கூடாரங்கள்...! அது அமர்நாத் யாத்திரை செல்லுவதற்கு போடப்பட்டது என தெரியவந்தது.


அமர்நாத் செல்ல இரு வழிகளில் உண்டு . ஒன்று பல்டல் மற்றொன்று பகல்காம்.


பல்டல் வழி மிக குறைந்த தூரம் 16 கிலோமீட்டர் . ஆனால் செங்குத்தான மற்றும் சாய்வான மலைத்தொடர்களை கடக்க வேண்டும். மிகவும் சிரமமானது.



பகல்காம் வழியானது 4~5 நாட்கள் நடந்து கிட்டத்தட்ட்ட 50 கிலோமீட்டர் தூரத்தை கடக்க வேண்டும். இவ்வழியானது பல்டல் வழியை விட சிறந்ததாக இருக்கும்.


ஆதலால் அனைவரின் தேர்வும் இவ்வழியே…! நடக்க முடியாதோர் குதிரைகளில் செல்லுமாறு காஷ்மீர் மாநில அரசு வழிவகை செய்துள்ளது. அதிக பட்சம் இருவழி கட்டணமாக 5000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.


இந்த யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை நடைபெறுகிறது.


அதனை தொடர்ந்து செல்லும் போது சோஜிலா மலைத்தொடர் வர ஆரம்பித்ததது. இது 11578 அடி உயரத்தில் இருப்பதால் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு, குளிர் காலங்களில் காஷ்மீரிலிருந்து லே செல்லும் வழி மூடப்படுகிறது.


இதனால் ராணுவ போக்குவரத்து பெரிதும் பாதிக்கிறது. இதற்காக கடந்த மே மாதத்தில் சோனாமார்கிலிருந்து திராஸ் வரை சுரங்கப்பாதை அமைக்க 6808 கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டு, 14கிலோமீட்டர் தூரத்திற்கு, இருவழி சாலையாக, பல்வேறு சிறப்பம்சங்களோடு வேலை நடைபெற்று வருகிறது.


இதனால் 3 மணிநேர பயணம் வெறும் 15 நிமிட பயணமாக மாறும். அதுமட்டுமல்லாமல் வருடமுழுவதும் பயணம் செய்ய ஏதுவாக அமைகிறது.


இதன் பணிகள் முடிந்து, உபயோகத்திற்காக திறக்கப்படும்போது, ஆசியாவின் மிக நீளமான இருவழிச்சுரங்கப்பாதையாக இருக்கும்.


இந்த சுரங்க பாதை திட்டம், வழக்கமான போக்குவரத்திற்கு மட்டுமே பெரிதும் உதவியாக இருக்கும்.


சுற்றுலா செல்லும் போது மலைகளின் அழகை 3 மணி நேரப்பயணமாக அனுபவித்து செல்வதே சிறந்த அனுபவமாக இருக்கும்.


அதன் பிறகு, சோஜிலா மலைத்தொடர் உச்சிக்கு சென்று அங்கே வாகனத்தை விட்டு வெளிவரும் போதுதான் அந்த சீதோஷண நிலையை அறிய முடிந்தது.


சுவாசிக்க முடியாமலும், ஊசி போன்ற பனிக்காற்றும், நடக்க கூட முடியாத நிலையை முதன் முதலாக இமயமலையில் உணர முடிந்தது.


அவ்வாறு இருந்தும் 30 நிமிடங்கள் அங்கு சாலையில் வரும் இரு சக்கர வாகனங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லியும், அடிவாரத்தில் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளை ரசித்தும் , ரசித்ததை புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தோம்.



சோஜிலா மலை தொடரை கடந்து அதன் மறுபுறம் கீழே இறங்கும் போது பசியும் தொற்றிக் கொண்டது. அடுத்து வருவது திராஸ்.

இங்கு இரவு தங்கி, மறுநாள் செல்வதே எங்கள் திட்டம்.


ஆனால் இப்போது மதிய வேலையே..!




இன்றைய திட்டத்தின்படி, சோனாமார்கில் 2~3 மணி நேரங்கள் செலவிடுவதாக இருந்த நேரம் இப்போது மீதமிருந்தது.


வாகன ஓட்டுனரும், "இங்கே மதிய வேளை உணவு உண்ட பின்னர் கார்கில் போர் நினைவகத்தை சிறிது நேரம் பார்த்துவிட்டு, அங்கிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில், கார்கில் சென்று இரவு தங்கிக்கொள்ளலாம்" என யோசனை சொல்ல, அதுவும் எங்களுக்கு நல்ல திட்டமாக தெரிந்தது.


மறுநாள் பயணத்துக்கும் கார்கில் பகுதி ஒரு மையமான (மய்யம் அல்ல) இடமாக தெரிந்தது. என்ன..! அங்கு இரவு தங்கும் விடுதிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.


அவ்வாறே திராஸ் பகுதியில் மதிய உணவிற்காக, உணவகம் சென்று, அசைவ உணவை கேட்க, வந்தது 30 நிமிடங்களுக்கு பிறகு..! ஆட்டுக்கறி அருமையாக அமைந்தது…! கோழிக்கறி கோபம் ஏற்படுத்தியது. ஏனென்றால் அது நன்கு வேகாமலும், பழைய கறியாகவும் காணப்பட்டது.


காஷ்மீரில் உண்ட முந்தய நாள் அசைவ உணவு, இந்த உணவைவிட ஒப்பிடமுடியாத வண்ணம் சுவையாகவும், விலை குறைவாகவும் காணப்பட்டது.


அவ்வாறே மதிய உணவை முடித்துக்கொண்டு, வாகனம் செல்லச்செல்ல தூக்கம் கண்ணை சொக்கியது...


சில நிமிடங்கள் அசந்து தூங்கியவுடன், நண்பர் எழுப்ப, வந்தது கார்கில் போர் நினைவகம்...!


இது கார்கில் ஊரிலிருந்து 50 கிலோமீட்டர் முன்னதாக அமைந்துள்ளது.


பின்னர் நினைவகத்தினுள் செல்லும் முன் நமது அடையாள அட்டைகள் ராணுவ அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, சில விதிமுறைகளோடு நம்மை உள்ளே அனுமதித்தனர்.


இதன் பின்னர் நடந்தது கதையின் ஆரம்பத்தில் நான் சொல்லியதுவே..!


அதன் பிறகு கார்கிலுக்கு சென்று தங்கும் விடுதிகள் பார்த்து சிறுது ஓய்விற்குப்பிறகு, மாலை 5 மணிக்கே கார்கில் கடைவீதியை "மாமோஸ்" சாப்பிட அலசி ஆராய்ந்து, இறுதியாக எங்களது விடுதியின் அருகில் இருக்கும் உணவகத்திற்குச் சென்று மறுபடியம் அசைவ உணவிற்கான வேட்டை தொடங்கியது. சிக்கன் மாமோஸ் டெல்லி பகுதியில் கிடைப்பதைவிட சற்று வித்தியாசமாகவே இருந்தது.


வேட்டை முடிந்ததும், இரவு குளிருக்கு இதமான பானங்கள் எங்கு கிடைக்கும் என சிலரிடம் கேட்க, சரியாய் பதில் கிடைக்காததால் ஏமாற்றமே கிடைத்தது...! இதில் எனக்கு எந்த ஏமாற்றமும் ஏற்படவில்லை.


தங்கியிருந்த விடுதியில் கேட்ட போதிலும், விரோதியைப் போல் பார்த்தனர்.


இரவு 10 மணி அளவில் தூங்கச் செல்லும் போது அதே நபர் வந்து, பானங்கள் வேணுமா ? என்று கேட்க, நண்பர்கள் காட்டமாக, “வேண்டாம்” என சொல்ல, இரெண்டாம் நாளும் சரக்கின்றிக் கழிந்தது...!



தொடரும் .....!

122 views0 comments

Recent Posts

See All

Comments


All contents are in this blog, Copy Righted by Siva Photography.

bottom of page