வனத்துறை அதிகாரிகள் சத்தமிடுகிறார்கள்; விசிலும் அடித்து கூப்பிடுகிறார்கள்; ஏறக்குறைய அரைமணிநேரம், எதையும் சட்டை பண்ணாமல், நானும் ஆதியும் ஊரையே உலா வருகின்ற காட்டுயானையை புகைபடமெடுத்தும், அதன் அசைவிற்காகவும் காத்துக்கொண்டிருந்தோம்.
சிறிது நேரத்தில் படபடப்புடன் அதிகாரிகள் எங்களருகே வந்துவிட்டனர். வந்தவுடனே என்னுடைய காமெராவை வாங்கிக்கொண்டு திரும்பிச்சென்றனர். எனக்கு என்ன நடக்கிறேனதென்பதே தெரியவில்லை. நாங்களும் விஷயம் தெரியாமல், அவர் பின்னே சமரசத்திற்கு ஓடிச்செல்ல, தேயிலை தோட்டத்திலிருந்து சாலையை அடைந்தோம்.
"நாலுநாளா தூக்கமில்லாமல், லோ லோனு அலைஞ்சு, ஒரு வழியா யானை ஆற்றின் புதருக்குள் அடைக்கலமாகட்டும் என நிம்மதியாய் இருக்க, நீங்கள் என்னடானா, அதை கூச்சல் போட்டு இன்னும் அலையை விடுவீங்க போலிருக்கே ! கேமரா கிடையாது போங்கனு" கறாராகச் சொல்ல , நானும் ஆதியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, இது உனக்குத் தேவையான்னு கேட்டுக்கொள்வதைப் போல் நின்றிருந்தோம்.
உயரதிகாரி ஒருவர் அவ்வழியே செல்ல, எங்களை சற்று தூரம் தள்ளியிருக்கச் சொன்னார். எங்களுக்கோ அவ்வாறு அதிகாரி வரும் போது, மறித்து, "எங்கள் காமெராவை புடுங்கிக் கொண்டார் இவர்" என புகாரளிக்க காத்துச் சாலையோரம் நின்றோம்.
ஒருவேளை மறித்து நிற்காமல் சென்றுவிட்டால், அடுத்து பைக்கும் பறிபோகும் என எண்ணி, அமைதியைக் கடைபிடித்தோம்.
அதிகாரி, சில நிமிடத்தில் எங்களைக் கடக்க, இவ்வாறெல்லாம் இனி நடந்து கொள்ளக் கூடாது, "எங்கிருந்து வருகிறீர்கள்"? என கேட்டு விட்டு, காமெராவை கொடுத்துவிட்டார் எங்களிடம்.
அது கேமரா வாங்கி ஒருவாரத்தில் நடந்த சம்பவம். அன்று மட்டும் அது திரும்பக் கிடைத்திராவிட்டால், இன்று என்னுள் புகைப்படக்கலையின்றி, திரும்ப கேமரா வாங்கக் கூட எண்ணமின்றி, வெறுமனே இருந்திருப்பேன்.
வாருங்கள் கதைக்குச் செல்வோம் !
வால்பாறை , எத்தனை முறை சென்றாலும் சலிக்காத ஒரு இடம், இல்லை ! ஒரு சுற்றுலா தளம். இல்லை ! இல்லை ! ஒரு சொர்க்கம் !
சில வருடங்களுக்கு முன்னே (2016) , முதன் முறை வால்பாறை சென்ற அனுபவத்தை இக்கதை மூலம் பகிர்ந்து கொள்கின்றேன்.
நாள் 1:
திண்டுகலிலிருந்து பைக்கில் வால்பாறை மற்றும் அதிரப்பள்ளி அருவி சென்று வரத் திட்டமிட்டுப் பயணம் ஆரம்பமானது. நான் ஏற்கனவே விடுமுறையில் ஊருக்கு வந்துவிட, ஆதி (அலுவலக நண்பர்) பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து ஒட்டன்சத்திரம் வர, அப்படியே எனது பைக்கில் இருவரும் பழனி வழியாக உடுமலை, ஆழியாறு, வால்பாறை செல்ல வாகனத்தை முறுக்கிக் கொண்டிருந்தோம்.
![](https://static.wixstatic.com/media/4ae9ce_4f25cc38521440d9adb6a3ae1aebd58a~mv2.jpg/v1/fill/w_980,h_1470,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_4f25cc38521440d9adb6a3ae1aebd58a~mv2.jpg)
பழனியில் கோவில் யானையை நன்கு குளிப்பாட்டி, சந்தனமிட்டு, அலங்காரத்தோடு கடைவீதியில் அழைத்து வந்துகொண்டிருந்தனர். "நாங்கள் வால்பாறை சென்று, காட்டு யானையைப் பார்த்துவிட்டு வருகிறோம்" என மனதில் எண்ணிக்கொண்டு, கடந்து சென்றோம்.
உடுமலையில் நண்பர் அரவிந்த் இல்லத்தில், காலை உணவு மற்றும் சிறந்த உபசரிப்பில் திளைத்துவிட்டு, வென்கோபுரங்களாய் நின்றிருந்த காற்றாலைகளை வாயில் ஊதி சுற்றவைக்கும் முயற்சியில் சென்றுகொண்டிருந்தோம்.
மேற்குத்தொடர்ச்சி மலைகளைக் கடந்து மெதுவாய்த் தவழ்ந்து வரும் கரிய மேகங்களை எதிரே முட்டிக்கொண்டு சென்றோம் !
![](https://static.wixstatic.com/media/4ae9ce_1c282a3a25044505a045bc52a68f4bba~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_1c282a3a25044505a045bc52a68f4bba~mv2.jpg)
ஆழியாரில் நண்பர் ராஜேஷ் எங்களை வரவேற்று நவமலை பகுதியைச் சுற்றிக்காண்பித்தார்.
![](https://static.wixstatic.com/media/4ae9ce_bdbacd68249f4edd839d1de94e82b0ca~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_bdbacd68249f4edd839d1de94e82b0ca~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_db1f1212e1f8459bb5502a122de735d9~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_db1f1212e1f8459bb5502a122de735d9~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_f42b78dbb8f740889736367126aafe13~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_f42b78dbb8f740889736367126aafe13~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_5fdd52b273fe482382a85286c706ae97~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_5fdd52b273fe482382a85286c706ae97~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_8a8fa1816e204e79a9df5f22b11b9bcc~mv2.jpg/v1/fill/w_980,h_647,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_8a8fa1816e204e79a9df5f22b11b9bcc~mv2.jpg)
குரங்கருவி வரும் வரை அவரிடம் உரையாடிவிட்டு, பின்னர் விடைபெற்றுக்கொண்டு, கொண்டை ஊசி வளைவுகலின் ஆரத்தை சரியாக வட்டமிட்டு மேலே சென்றோம்.
![](https://static.wixstatic.com/media/4ae9ce_13a38de6592349cc940256185742f9ee~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_13a38de6592349cc940256185742f9ee~mv2.jpg)
மேலே செல்லும் போது மலையின் பிரமாண்டமும், அங்கு சென்றதும் கீழே உள்ள அணையின் பரப்பும் வியக்க வைத்துக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்ணிற்கு ஊட்டியது.
![](https://static.wixstatic.com/media/4ae9ce_fb98864ee0064dab9bd91886b5f5994b~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_fb98864ee0064dab9bd91886b5f5994b~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_9a40680afa0e4bdda97365970065e3f0~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_9a40680afa0e4bdda97365970065e3f0~mv2.jpg)
புதுத்தோட்டம் என்றொரு இடத்தில் சிங்கவால் குரங்கு சாலையோரத்தில் இருப்பதாகவும், அழகாக போட்டோ எடுத்துச்செல்லலாம் என ராஜேஷ் கூறியிருந்தார். சொன்னது போலவே அவ்விடத்தில் ஒரு கூட்டமே மாயாஜாலம் செய்து கொண்டிருந்தது.
![](https://static.wixstatic.com/media/4ae9ce_cc1c562c4ca24da599369f85a6f98880~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_cc1c562c4ca24da599369f85a6f98880~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_624d261770ee4f0a87136f59793962bb~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_624d261770ee4f0a87136f59793962bb~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_10ba0a622428454e9b6c4685d3131415~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_10ba0a622428454e9b6c4685d3131415~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_cfd34f6313c04bc79ae263966a20fb87~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_cfd34f6313c04bc79ae263966a20fb87~mv2.jpg)
எனக்கும் வனவிலங்குகளை புகைப்படமெடுக்கும் ஆர்வமும் அப்போதுதான் வந்தது. கூட்டத்தில் ஒரு குரங்கு மட்டும் சற்று சோம்பலாக, அமைதியாக சாலையோர தடுப்பு வேலியில் அமர்ந்து, கண்ணயர்ந்து கொண்டிருந்தது.
5 அடி தூரத்தில் நின்று , காமெராவை சுழற்றி சுழற்றி படமெடுத்தேன். அதுவும் "நாம என்ன அவ்ளோ அழகாவா இருக்கோம் இன்றைக்கு ?" என மனதில் நினைத்துக்கொண்டு என்னை மறுபடியும் குறுகுறு வென்று பார்த்து, சற்று தூரத்தில் நின்றிருந்த எனது பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டது.
இவ்வாறே ஒரு அரைமணி நேரம் விதவிதமாய் போட்டோ எடுத்துவிட்டுக் கிளம்பினோம் வால்பாறை நோக்கி !
![](https://static.wixstatic.com/media/4ae9ce_63e93defd77b4374aa8246947046bf96~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_63e93defd77b4374aa8246947046bf96~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_7863eebf46c94eac903fede2456212ac~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_7863eebf46c94eac903fede2456212ac~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_f80a6d9736f44c119220d9eb25bf38a0~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_f80a6d9736f44c119220d9eb25bf38a0~mv2.jpg)
சில நிமிடங்களில் பரபரப்பான வால்பாறை எங்களை வரவேற்றது. அங்கு சென்றதும், மதிய உணவை உண்டுவிட்டு, கூழாங்கல் ஆறு மற்றும் வெள்ளமலை சுரங்கம் போன்ற பகுதிகளைச் சுற்றிவிட்டு மீண்டும் வால்பாறை அடைந்தோம்.
![](https://static.wixstatic.com/media/4ae9ce_26ce8030ecab422fbd4467e5d36997ff~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_26ce8030ecab422fbd4467e5d36997ff~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_496ed57111ed45d1a27c0bcff959b086~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_496ed57111ed45d1a27c0bcff959b086~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_594c5fe3bd10477b9c2f5028fa9e8670~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_594c5fe3bd10477b9c2f5028fa9e8670~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_48600abc77d64f0dbff4e6064afbfaa9~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_48600abc77d64f0dbff4e6064afbfaa9~mv2.jpg)
அரைமணி நேரத்திற்கு மேலாக தங்கும் விடுதிகளைத் தேடி அலைந்து, இறுதியாக பழனியப்பா நகைக்கடை உரிமையாளரின் விடுதி எங்களுக்குக் கிடைத்தது. அறைக்குச் சென்றதும் சிறுது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, இரவு உணவை சாப்பிட்டுவிட்டு உறங்கினோம்.
நாள் 2
மறுநாள் காலை எழுந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி சென்று வருவது மட்டுமே எங்களது திட்டம். அவ்வாறே குளித்துக் கிளம்பினோம் காலை ஆறுமணிக்கே !
சோலையாறு அணை வழியாக கிட்டத்தட்ட 75 கிலோமீட்டர் தொலைவு. பனிபோர்த்திய தேயிலைத்தோட்டங்கள், நடைப்பயிற்சி செய்வோர்கள், எஸ்டேட் வேலைக்குச் செல்வோர், இரைதேடும் பறவைகள், ஆவி பறக்கும் தேநீர் கடைகள் என ஒவ்வொன்றாக ரசித்துக் கொண்டே சென்றோம்.
பரந்து விரிந்த சோலையார் அணையின் பிரமாண்டத்தைப் பார்த்துவிட்டு, வழியில் ஒரு கடையில் காலை உணவை சாப்பிட்டுவிட்டு, கேரளா எல்லலையான மலகப்பாரா சோதனைச்சாவடியை அடைந்தோம்.
![](https://static.wixstatic.com/media/4ae9ce_3eba3bc29c89426ba5bc67eef82f6fba~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_3eba3bc29c89426ba5bc67eef82f6fba~mv2.jpg)
இங்கிருந்து அதிரப்பள்ளி அருவி சோதனைச்சாவடி 50 கிலோமீட்டர் தூரம் ! இதனை அதிகபட்சம் 2 மணிநேரத்தில் கடக்க வேண்டும், வழியில் எங்கும் நிற்க கூடாது, பிளாஸ்டிக் பொருட்களை எங்கும் வீசக்கூடாது என விதிமுறைகளுடன் அனுப்பினர்.
ஒரு பேருந்து மட்டுமே செல்லக்கூடிய குறுகிய தார் சாலை. இருபுறமும் அடைந்த காடுகள்.
![](https://static.wixstatic.com/media/4ae9ce_a61e3f558e4a4b2fa4154200fbabc7a6~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_a61e3f558e4a4b2fa4154200fbabc7a6~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_6a6f5b1b51cf43489e257b25fe9d0f4d~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_6a6f5b1b51cf43489e257b25fe9d0f4d~mv2.jpg)
இதுவரை பார்த்திராத மரங்கள், சுவாசித்திடாத காற்று, கேட்டிடாத ஓசை, உணர்ந்திடாத பயம், யாருமில்லாத சாலை, தருணத்தைத் தந்தது இந்தப் பயணம்.
இப்படியொரு சூழலில் பாதி தூரம் சென்றதும், வலது புறத்தில் "கீழ் சோலையாறு அணையும்" சிறிது தூரத்தில் "பெருங்கல்குத்து அணையும்" பார்த்து ரசித்தோம்.
![](https://static.wixstatic.com/media/4ae9ce_4c0e12c67c7c4eef90c71f2c2e4c6cc9~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_4c0e12c67c7c4eef90c71f2c2e4c6cc9~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_ed4e9ff8798543aca5b30d8647f37330~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_ed4e9ff8798543aca5b30d8647f37330~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_bb8e9838214e4c37a530743ae367290b~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_bb8e9838214e4c37a530743ae367290b~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_4f76c4ab73f044719ac7192414fb210c~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_4f76c4ab73f044719ac7192414fb210c~mv2.jpg)
மிகக் கவனமாக செல்லக்கூடிய வழி இது. காட்டு விலங்குகள் யானை புலி சிறுத்தை என எந்த நேரத்திலும் தாக்கும் அபாயம் உண்டு. பைக்கில் செல்வது திரில்லிங் என்றாலும், காரில் செல்வது சற்று பாதுகாப்பானது !
சரியாக 2 மணி நேரத்தில் அதிரப்பள்ளி அருவியை அடைந்தோம். பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம் என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு அழகு ! இங்கு எடுக்காத திரைப்படமே இல்லை எனலாம். புன்னகை மன்னன், இருவர், முதல்வன், பையா, இராவணன், பாகுபலி என எண்ணிலடங்காப் படங்கள் இங்கு எடுக்கப்பட்டதே !
![](https://static.wixstatic.com/media/4ae9ce_16add313bf81484d8c92368a490a60cf~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_16add313bf81484d8c92368a490a60cf~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_7398e8e084bf4aa6a7714a1646b66458~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_7398e8e084bf4aa6a7714a1646b66458~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_92fa3c21db414f24a71bf0c3bd0a7e09~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_92fa3c21db414f24a71bf0c3bd0a7e09~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_e056690dc3ee42c1b42ddb8d28042665~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_e056690dc3ee42c1b42ddb8d28042665~mv2.jpg)
மழைக்காலத்தில் காட்டின் வெள்ளத்தை சாலக்குடி ஆறு இழுத்துக்கூட்டி வந்து இங்கே கொட்டுவது கண்கொள்ளாக்காட்சியே !
அருவிக்கு மேலயும், கீழேயும் சென்றும் பார்க்கும் வசதி உண்டு. அவ்வாறே 2 மணிநேரம் சென்றது. பின்னர் வால்பாறை திரும்ப, பயணம் ஆரம்பித்தது.
வரும் போது சோலையாறு அணையிலிருந்து தோனிமுடி , முடிஸ் வழியாக வால்பாறை வந்தடைந்தோம்.
![](https://static.wixstatic.com/media/4ae9ce_bf01c45091b9435cb6606602ead39afd~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_bf01c45091b9435cb6606602ead39afd~mv2.jpg)
புதிதாய் போடப்பட்ட சாலைகள்! அதில் மாட்டு சாணம் போன்று ஆங்காங்கே யானைகளின் சாணம் . அனேகமாக ஒரு நாள் முன்பு, இங்கு யானைகள் சுற்றித் திரிந்திருக்கலாம் !
முடிஸ் வந்ததும் மதியஉணவு சாப்பிட்டுவிட்டு, வால்பாறை நோக்கி வந்தோம். இரவு உணவோடு அன்றைய தினம் குளிரில் இதமாய்ச் சென்றது.
நாள் 3
மறுநாள் காலை எழுந்து வால்பாறை அருகிலிருக்கும் நீரார் அணை , சின்னக்கல்லார் அருவி பார்த்துவிட்டு ஊருக்குச் செல்லலாம் என திட்டமிட்டு கிளம்பினோம்.
கூழாங்கல் ஆற்றைக்கடந்து செல்லும் போது வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிவதாகத் தகவல் கிடைத்தது.
பொதுவாக அங்கு யானைகளின் உலாவல், வனத்துறையினரால் குறுஞ்செய்தி மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது! அவ்வாறு கிடைத்த செய்தியால் ஆதி குதூகலமாகி, யானையிருக்கும் இடத்திற்கு வண்டியை விரட்டினான்.
அங்கு சென்று, அங்கிருப்போரிடம் கேட்க, தூரத்தில் யானை ஒன்றைக் காட்டினர். வெகு நேரமாகியும் எங்களால் காணமுடியவில்லை. அவர்களே ஒரு யோசனை சொன்னார்கள்.
எதிரேயுள்ள தேயிலைத்தோட்டத்திலிருந்து பார்த்தால் தெரியும் எனக் கூறினார். நாங்களும் அங்கே சென்று பார்க்க, மேனியெங்கும் மண்ணைப் பூசிக்கொண்டு மண்மேடு போல், ஆற்றின் புதருக்குள் அசையாமல் நின்றிருந்தது. இனி நடந்ததைத்தான் கதையின் ஆரம்பத்தில் கூறியது!
![](https://static.wixstatic.com/media/4ae9ce_55cee4c50d8c461c97c8b6a16096f797~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_55cee4c50d8c461c97c8b6a16096f797~mv2.jpg)
பிறகு கேமரா கிடைத்த சந்தோஷத்தில் வெள்ளமலை நீர்ச் சுரங்கம் சென்று மறுபடியும் போட்டோ எடுத்துவிட்டு நீரார் அணை நோக்கிச் சென்றோம்.
![](https://static.wixstatic.com/media/4ae9ce_20b1cecc90bd45c3898d2dead42f5cf7~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_20b1cecc90bd45c3898d2dead42f5cf7~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_d653d0150060422baa422b616bcd66fc~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_d653d0150060422baa422b616bcd66fc~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_b3b6da93c59c4677bb6f556bc59617db~mv2.jpg/v1/fill/w_980,h_1470,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_b3b6da93c59c4677bb6f556bc59617db~mv2.jpg)
வழியிலே அணையைப் பார்த்து ரசித்துவிட்டு , சின்னக்கல்லார் அருவியை நோக்கிச்சென்றோம். அப்போது காட்டு மாடு ஒன்று மெதுவாக தேயிலைத்தோட்டத்திலிருந்து சாலையில் இறங்கி எங்கள் முன்னே சென்றது. குறிப்பிட்ட சில தூரத்தில் நங்கள் மெதுவாய்ப் பின்தொடர்ந்தோம்.
ஜிம்க்குச் சென்ற மாடு போலிருந்தது ! உடற்கட்டமைப்பு அவ்வளவு நேர்த்தி !
![](https://static.wixstatic.com/media/4ae9ce_a1e885987ca740a5a764fdbc4ef59b7d~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_a1e885987ca740a5a764fdbc4ef59b7d~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_3179c72b586f4268b1a4102000e7ef5a~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_3179c72b586f4268b1a4102000e7ef5a~mv2.jpg)
சின்னக்கல்லார் அருவிக்குச் சாலையிலிருந்து சற்று தூரம் நடந்து, காட்டிற்குள் செல்ல வேண்டும். அவ்வாறே நடந்து செல்ல, வழியில் சிறுத்தையின் கழிவுகளைக் கண்டு அஞ்சி நின்றேன்.
அதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான், பெரியார் புலிகள் சரணாலயத்தில் (கேரளா) காட்டிற்குள் நடைபயணம் சென்றபோது, வனத்துறை அதிகாரி இதே போன்று காட்டினார். ஆதலால் சற்று கலக்கம் ஏற்பட, இருவரும் பின்வாங்கினோம்.
பிறகு அருகில் வசிக்கும் மக்களில் ஒருவரை அழைத்துச் சென்றோம். அவரும் எங்களுக்கு இந்த அருவி, காடு , நடந்த நிகழ்வுகள், இங்குள்ள விலங்குகள் என பேசிக்கொண்டே அருவிக்கு அழைத்துச்சென்றார்.
![](https://static.wixstatic.com/media/4ae9ce_1913714dfd3c4dfe8ddfcd2fc8927680~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_1913714dfd3c4dfe8ddfcd2fc8927680~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_0ab4e5ee09e14139aaf0359e1ba397c9~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_0ab4e5ee09e14139aaf0359e1ba397c9~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_0e6f3a56c72144c59574584e0bed74b2~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_0e6f3a56c72144c59574584e0bed74b2~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_144b986b295740fcbbc3e5557db441c1~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_144b986b295740fcbbc3e5557db441c1~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_32cde9fe69194b22ad6304956af3d8e0~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_32cde9fe69194b22ad6304956af3d8e0~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_58238b88fc10430a9f9ae765c3448702~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_58238b88fc10430a9f9ae765c3448702~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_d5419d221a65465ebe4fa3338b9cf637~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_d5419d221a65465ebe4fa3338b9cf637~mv2.jpg)
அதிரப்பள்ளி அளவுக்கு இல்லையென்றாலும், நுரைகளை கக்கி கொண்டு சாய்வாக விழும் அருவி, அதனைச்சுற்றி பசுமை காடுகள், உருளமுடியாத பாறைகள் என மனதை வியக்க வைக்கும் அழகைத் தந்தது.
ஏறக்குறைய 1 மணி நேரத்திற்குப் பின்னர் அவரிடம் விடைபெற்று வால்பாறை அடைந்தோம். அறையைக் காலி செய்து, உடமைகளோடு ஊர் திரும்பினோம்.
தவழ்ந்து செல்லும் மேகங்கள்,
ஆர்ப்பரிக்கும் அருவிகள்,
சிங்கவால் குரங்குகளின் சேட்டைகள்,
கண்ணைக் குளிர்விக்கும் தேயிலைத்தோட்டங்கள்,
சுவாசத்தை புதிதாக்கிய வனங்கள்,
பிரமாண்டதையளித்த அதிரப்பள்ளி,
எங்களைக் கூட்டிச்சென்ற எனது பைக்,
இத்தனையும் புகைப்படங்களாய் மாற்றிய எனது கேமரா,
உற்ற துணையாயிருந்த தம்பி ஆதி...
இன்றும் இவையனைத்தும் மனதில் பசுமையாய் !
இயற்கையை நேசிப்பவரா நீங்கள் ?
இதுவரை வால்பாறை சென்றதில்லையா?
விரைவாகத் திட்டமிடுங்கள் வால்பாறை எனும் சொர்கத்தைக் காண !
என்றும் அன்புடன்,
ப சிவலிங்கம்
Comments