ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செல்வது வழக்கமான ஒன்றாக இருந்தது எனக்கு. பணியிட மாறுதலில் கடந்தஆண்டு ஜெய்ப்பூர் வந்துவிட, வேடந்தாங்கல் செல்வது இயலாமல் போனது. ஆனால் பரத்பூர் பறவைகள் சரணாலயம் செல்ல வெகு நாட்களாக ஆசையும் இருந்தது. ஜெய்ப்பூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் இந்த சரணாலயம் உள்ளதால், ஒருமுறை சென்று வருவோம் எனத் திட்டமிட்டேன். அவ்வாறு சென்று வந்த அனுபவத்தின் வெளிப்பாடே இக்கதை !
வாருங்கள் பறவைகளைத் தேடிச் செல்வோம் எனது கேமெராவோடு !
அதென்ன பறவைகளைத் தேடி?
"எங்குமில்லாதபறவைகளா அங்குள்ளது எனக் கேட்கலாம்", ஆம் அவ்வாறே வைத்துக் கொள்ளலாம்.
அதிகாலை 1.30 மணி , அலாரம் அடிக்கும் முன் விழிப்பு ! 30 நிமிடத்தில் கிளம்பி, நடுங்கும் குளிரில், ஸ்கூட்டரில் 17 கிலோமீட்டர் பயணம் !
![](https://static.wixstatic.com/media/4ae9ce_21fb62f6f81b4cf099b5f1592f1401d3~mv2.jpg/v1/fill/w_980,h_784,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_21fb62f6f81b4cf099b5f1592f1401d3~mv2.jpg)
2.45 மணிக்கு ஜெய்ப்பூர் ரயில் நிலையம் அடைந்து வண்டியை நிறுத்திவிட்டு , 3 மணி ரயிலுக்காக காத்திருந்தேன். ஏறக்குறைய பத்து நிமிட தாமதத்தில் வந்து நின்றது அஹமதாபாத்-குவாலியர் எக்ஸ்பிரஸ்.
இதற்கு மேல்சொல்வதற்கு ஒன்றுமில்லை ! வடஇந்திய ரயில்பயணங்கள் அனைவரும் அறிந்ததே ! ஏறக்குறைய ஒரு கும்பல் 40~50 மூட்டை முடிச்சுகளை கீழே இறக்கிக் கொண்டிருந்தது. அதில் ஒன்று எனது மூக்கைப் பதம் பார்த்தது !
சரி இருக்கைக்குச்செல்லலாம் எனத் தேடிச் சென்றால், ஏற்கனவே அமர்ந்துள்ள நபர் என்னைப் பார்த்து, உனது இருக்கையா ? எங்கே டிக்கெட்டை காட்டு ? என இந்தியில் கேட்க , "நீ யாரு எனது டிக்கெட்டை செக் பன்ன ? எனக்கேட்டு முறைக்க, "பாக்கு போட்ருக்கேன் ஜன்னலோரம் வேணும்" என திரும்ப பதில் வர, “நீ எங்கயோ துப்பிக்கோ” எனச் சொல்லி முறைக்க, இடம் கிடைத்தது. முன்பதிவு செய்த இருக்கையில் இடம் விட இவ்வளவு அதிகாரம் !
ரயிலின் வேகத்தில் குளிர்க் காற்று, பெட்டியின் உள்ளே ஆங்காங்கே வந்து
சென்றது. சரியாய் இரண்டரை மணிநேரத்தில் பரத்பூர்ரயில் நிலையம் வந்தது. இறங்கி வெளியே வந்து ஆட்டோவில் சரணாலயம் வந்தடைய 6 மணி. அதற்குள் அத்தனை நபர்கள் அங்கு நிறைந்திருந்தனர் !
சரியென்று நுழைவுச் சீட்டு (110 ரூபாய் ) எடுத்துக்கொண்டு, மிதிவண்டியும்
(150 ரூபாய் -முழுநாள் வாடகை) ஒன்றைஎடுத்துகொண்டு பலநாள் கனவு நனவாகியதை நினைத்து சென்று கொண்டிருந்தேன். சைக்கிள் செல்லும் வேகத்திற்கு கூடகுளிர் காற்று , கைகளை விறைக்க வைத்தது.
வைகறை வானம் கதிரவனை அலங்காரம்செய்து, அனுப்பதயாராயிருந்ததை செவ்வானம் சொல்லாமல் சொல்லியது !
இரெண்டு கிலோமீட்டர் தொலைவு வரை சிறு சிறு மரங்கள் நிறைந்த பொட்டல் காடுகளைப் போல் இருந்தது. அதன் பின்னர் இருபுறமும் ஓங்கி உயர்த்த மரங்கள் நம்மை வரவேற்று அதன் பின்னர் இருபுறமும் நீர்நிலைகளில் பறவைகளின் ஓசையோடு காலை வேளை அழகாய் வந்து கொண்டிருந்தது.
காலைச் சூரியனின் கதிர்கள் நீரில்பட்டு, தங்கத்தை வார்த்து ஊற்றியது போன்ற வண்ணங்கள். ஆங்காங்கே மொட்டை மரங்கள், அதில்நீர் காகங்கள், பாம்புத் தாரா, மஞ்சள் மூக்கு நாரைகள் என அனைத்து பறவைகளும் ஆரவாரமாக இரைகளை சேகரிக்க தயாராகிக் கொண்டிருந்ததனர்.
![](https://static.wixstatic.com/media/4ae9ce_0cce4a677a324a94936438ab9c554c0f~mv2.jpg/v1/fill/w_864,h_1296,al_c,q_85,enc_auto/4ae9ce_0cce4a677a324a94936438ab9c554c0f~mv2.jpg)
பொதுவாக இங்கு காணப்படும் பறவைகள் ஏறக்குறைய இந்தியா முழுவதும்
குளிர்காலங்களில் காணப்படுகிறது. இங்கு என்னசிறப்பு என்று பார்த்தால் ,
மிகப்பெரிய இடமும், அதற்கேற்ற மரங்களும், பறவைகளின் செயற்பாடுகளும் புகைப்படம் எடுக்க ஒரு அருமையான சூழலை தருகின்றது என்பதே !
![](https://static.wixstatic.com/media/4ae9ce_a8578d1a33e2458489ad2bab3c3b368f~mv2.jpg/v1/fill/w_980,h_735,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_a8578d1a33e2458489ad2bab3c3b368f~mv2.jpg)
அதுமட்டுமில்லாமல் வேடந்தாங்கலைப் போன்று 100 மடங்கு பெரிய இடம் இதுவாகும். (வேடந்தாங்கல் ஏறக்குறைய 70 ஏக்கர் ; பரத்பூர் 7100 ஏக்கர் )
ஆதலால் இங்கு 366 பறவை இனங்கள், 379 தாவர இனங்கள், 50 வகை மீன்கள், 13 வகை பாம்புகள், 5 வகையான பல்லிகள், 7 நீர்நிலம் வாழ்வன இனங்கள், 7 ஆமை இனங்கள் மற்றும் பல்வேறு முதுகெலும்பற்ற உயிரினங்கள் வாழ்கின்றன.
அனைத்தையும் பார்ப்பது மிக அரிதே !
எனக்கு மிகவும்பிடித்த சூழல் என்னவென்றால் , பட்டமரத்தின் கிளைகளும் அதன் இயற்கை அழகும் , அதில் கும்பலாய் அமரும் பறவைகளும் ரசிக்க கூடிய ஒன்றாகும்.
![](https://static.wixstatic.com/media/4ae9ce_fa29e058c9634ee68678ffc752b046b1~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_fa29e058c9634ee68678ffc752b046b1~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_bae63dabe7f9441ebccbb26aa3bbb785~mv2.jpg/v1/fill/w_864,h_1296,al_c,q_85,enc_auto/4ae9ce_bae63dabe7f9441ebccbb26aa3bbb785~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_b045720ce5de4013ab7e4be7735540c2~mv2.jpg/v1/fill/w_980,h_1307,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_b045720ce5de4013ab7e4be7735540c2~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_1e32170c1c424269aea92179b27735a4~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_1e32170c1c424269aea92179b27735a4~mv2.jpg)
அவ்வாறே மிதிவண்டியை மிதித்துக் கொண்டு, சூழலை ரசித்துக் கொண்டு போகும் போது பெலிகான் பறவைகள் கூட்டமாக நீர்நிலைகளில் இறங்கியது. பின்னர் எதாவது ஓர் இடத்தில் இருந்து பறவைகளின் செயற்பாடுகளை புகைப்படமெடுக்க எண்ணி ஓரிடத்தில் அமர்ந்தேன்.
காலை மற்றும் மதிய உணவிற்காக, ரொட்டி மற்றும் தக்காளி தொக்கு என முந்தய தினமே சமைத்து எடுத்து வந்திருந்தேன். காலை உணவு உண்டு, மீண்டும் பறவைகளோடு நேரத்தை செலவிட்டேன்.
![](https://static.wixstatic.com/media/4ae9ce_ad2d3980ff1e4953b14c8bfb024b345e~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_ad2d3980ff1e4953b14c8bfb024b345e~mv2.jpg)
இறுதியாக பெலிகன் பறவைகள் அதிகமாக இருந்த இடத்தில் அனைத்து புகைப்படகலைஞர்களும் அமர்ந்து பெரிய லென்ஸில் அவைகளை
புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தனர். நானும் எனது கேமராவில் எடுத்த சில படங்களை உங்களுக்காக பகிர்ந்துள்ளேன்.
![](https://static.wixstatic.com/media/4ae9ce_3422b7f9dece43cfa01e5a69855de9ca~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_3422b7f9dece43cfa01e5a69855de9ca~mv2.jpg)
பெலிகன் கூட்டம் கூட்டமாக நீரை தனது அலகில் கொத்திச் செல்வது, கத்துவது, சண்டையிடுவது , பறந்துவந்து நீரில் இறங்குவது என என்னற்ற செயல்களைக் காண்பது நமது கண்களுக்கும் மனதிற்கும் புத்துணர்வே ! அதை காமெராவில் எடுப்பது அதைவிட சிறப்பு ! அவ்வப்போது நாரைகள் குறுக்கும் மறுக்காக செல்வது மிக அழகாய் இருந்தது !
![](https://static.wixstatic.com/media/4ae9ce_b3cc3b9302194cdc910fcef4d4ded12d~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_b3cc3b9302194cdc910fcef4d4ded12d~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_7cc1c412ad3c4261be05ae82b36bc871~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_7cc1c412ad3c4261be05ae82b36bc871~mv2.jpg)
11 மணிக்கு மேல் நீல வானமும், நீல வண்ண நீரும், வெண்ணிற பெலிகன் பறவையை மிகவும் அழகாய்க் காட்டியது.
![](https://static.wixstatic.com/media/4ae9ce_65cbe1d7bb964e9883cccb2d39bef15c~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_65cbe1d7bb964e9883cccb2d39bef15c~mv2.jpg)
அவ்வாறே அங்குசில மணிநேரங்கள் செலவிட்டு, மற்ற இடங்களை சுற்றிப்பார்க்க கிளம்பினேன்.
சுற்றுலா பயணிகளுக்காக சைக்கிள் ரிக்சாவும் இங்குள்ளது. அதில் சென்றால் மணிக்கு 200 முதல் 300 ரூபாய் வரை ஆகும் (இரு நபருக்கு) . ஆனால் நடந்து சென்று சுற்றிப் பார்ப்பது மிகக் கடினம் !
![](https://static.wixstatic.com/media/4ae9ce_3f71e60f09954db88255411b8ca236bd~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_3f71e60f09954db88255411b8ca236bd~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_b4ad0619631c42e684636a278ae438f8~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_b4ad0619631c42e684636a278ae438f8~mv2.jpg)
ஆதலால் புகைபடமெடுக்க விரும்புவர்கள் முழு நாளும் இங்கே செலவிடுவதும், ஒருவாரம் கூட தொடர்ந்து இங்கே வருவதும் சாதாரணமே !
அப்போது பாம்புத்தாரா எடுத்தமீனை நீர்காகம்தட்டிப் பறிக்க , அதை லாவகமாக தனது நீண்டஅலகால் விட்டுவிடாமல் கொண்டு செல்லும் அழகைப் பார்க்கலாம் கீழே உள்ள புகைப்படத்தில். இதைப் போன்ற எண்ணற்ற செயற்பாடுகளைக் கண்டு களிக்கலாம் இங்கு !
![](https://static.wixstatic.com/media/4ae9ce_b8bd1951fa4f4300ad47a00ac6d1d7a7~mv2.jpg/v1/fill/w_980,h_1225,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_b8bd1951fa4f4300ad47a00ac6d1d7a7~mv2.jpg)
நான் சென்ற இரு தினங்களுக்கு முன்னர், ஒரு பெலிகன் சிறிய ஆமையை மீன் என்று நினைத்து கொத்திவிட, தாய் ஆமை பழிக்குப் பழியாக அதன் அலகின் அடிப்புறமுள்ள குவளை போன்ற தோல் முழுவதும் கடித்துத் துப்பியது. இதனால் பெலிகனால் மீனைக் கொத்தி உண்ண முடியாமல், ஓரிரு தினங்களில் இறப்பு நிச்சயமானது. சோகமானது, ஆனால் அதுவே நிதர்சனம் ! இவ்வாறு நிகழ்வது வெகு அரிதே !
இதை “Pelican attacked by turtle at Bharatpur “எனத் தேடி பார்த்துக்கொள்ளலாம் இணையத்தில் ! பின்னர் மதிய உணவை உண்டு 4 மணி ரயிலைப் பிடிக்க கிளம்பினேன்.
வழியில் சைக்கிள் ரிக்சாகாரர் , எனது சிறிய கேமரா பைகளை பார்த்து என்ன லென்ஸ் வைத்துள்ளீர்கள் ? எனக் கேட்டதும் எனக்கு ஆச்சரியமானது ! ஏனென்றால் இவர்கள் இங்குள்ள பறவைகள் மற்றும் புகைபடமெடுக்க வருபவர்களோடு நாள் முழுக்க செலவிடுவதால் அனைத்தும் அத்துப்புடி !
எனது லென்ஸ் 250mm எனச் சொல்ல , இது போதுமானதாக இருக்காது, அடுத்த முறை 400mm அல்லது 600mm லென்ஸ் கொண்டு வாருங்கள், இது போட்டியான தருணங்கள் என அறிவுரை வழங்க, வியந்து போனேன் !
அவ்வாறான லென்ஸ் 60ஆயிரம் முதல் பலலட்சம் வரை ஆகும். எனக்கும் சில வருடங்களுக்கு பிறகு வாங்கும் ஆசை உள்ளது. வாங்கினால் தூரத்தில் இருக்கும் பெலிகன் கண்களைக் கூட துல்லியமாகப் பார்க்க முடியும்.
நானும் ஏறக்குறைய 1000 புகைப்படங்கள் எடுத்திருந்தேன். ஏன் இவ்வளவு எனக் கேள்வி கூட எழலாம் ! பறவைகளின் அசையும் செயற்பாடுகளை துல்லியமாக எடுக்கும் போது தொடர்ந்து நொடிக்கு 10~15 புகைப் படமெடுக்க வேண்டும். அதில் சிறந்த சிலவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
அது மட்டுமில்லாமல் ஓரேபடம் ஆனால் வெவ்வேறு ஒளி, நிறம் என மாற்றி மாற்றி எடுப்பதும் சிறந்த பயிற்சியே. ஆதலால் அவ்வாறு எடுக்கும் போது இத்தனை புகைப்படங்கள் சாதாரண எண்ணிக்கையே !
நான் கண்டவைகளை வர்ணிக்க ஆசைதான் ஆனால் அதை புகைப்படமாக காட்டுவதில் அதைவிட ஆர்வம். ஆதலால் அவைகளில் சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன்.
![](https://static.wixstatic.com/media/4ae9ce_ae7c12a344474716b8db36a9ed0894af~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_ae7c12a344474716b8db36a9ed0894af~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_5b0a90b7f0d04041b9a0c3eb773d30a0~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_5b0a90b7f0d04041b9a0c3eb773d30a0~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_f88e29542af64033b89feff6aef6a04a~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_f88e29542af64033b89feff6aef6a04a~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_9aa89fdfbe8a4fd6a80e90df039cc070~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_9aa89fdfbe8a4fd6a80e90df039cc070~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_5360f134b0434ab695dc00a4b432efa0~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_5360f134b0434ab695dc00a4b432efa0~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_c5c6b54e508b46cf8f6edca6f8133778~mv2.jpg/v1/fill/w_864,h_1296,al_c,q_85,enc_auto/4ae9ce_c5c6b54e508b46cf8f6edca6f8133778~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_3f33adab62184c06a59513419a555aa8~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_3f33adab62184c06a59513419a555aa8~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_def60bd562ef4e62a590214e1cbe9461~mv2.jpg/v1/fill/w_864,h_1296,al_c,q_85,enc_auto/4ae9ce_def60bd562ef4e62a590214e1cbe9461~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_6478a8cf664b415c8221c72fdd085f6b~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_6478a8cf664b415c8221c72fdd085f6b~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_62d2895c9e4a42cb95f6211d2f709149~mv2.jpg/v1/fill/w_980,h_637,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_62d2895c9e4a42cb95f6211d2f709149~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_5b6f2b0c5aa24ed6b6aff7f0b4d8b650~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_5b6f2b0c5aa24ed6b6aff7f0b4d8b650~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_942f80158e024720ad3419723cea8971~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_942f80158e024720ad3419723cea8971~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_2fdd8e328ad34ba2899a699862776f45~mv2.jpg/v1/fill/w_980,h_735,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_2fdd8e328ad34ba2899a699862776f45~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_7081946bb6cb49618035eb82e3845e12~mv2.jpg/v1/fill/w_980,h_714,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_7081946bb6cb49618035eb82e3845e12~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_525842c2fd9e446fa4e1932acc7a6a0b~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_525842c2fd9e446fa4e1932acc7a6a0b~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_0623893cf23943088b5dca1aa8f48905~mv2.jpg/v1/fill/w_864,h_1296,al_c,q_85,enc_auto/4ae9ce_0623893cf23943088b5dca1aa8f48905~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_15e601ff676b492fae3a22855878ef30~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_15e601ff676b492fae3a22855878ef30~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_cd1f532cfcdf4abbbeb1a442198a463e~mv2.jpg/v1/fill/w_864,h_1296,al_c,q_85,enc_auto/4ae9ce_cd1f532cfcdf4abbbeb1a442198a463e~mv2.jpg)
![](https://static.wixstatic.com/media/4ae9ce_70648d3f656849f0ab7d55a9d823931b~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/4ae9ce_70648d3f656849f0ab7d55a9d823931b~mv2.jpg)
இறுதியாக 3 மணியளவில் மிதிவண்டியை கொடுத்துவிட்டு வெளியேறி , ரயில் நிலையத்தை அடைந்து, ஆக்ரா-அஜ்மீர் ரயிலில் 7 மணிக்கு ஜெய்ப்பூர் வந்தடைந்து , அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டிற்கு வந்து, 1000 புகைப்படங்களை உற்று நோக்கினேன் !
அடுத்த சில நாட்களுக்கு அந்த பறவைகளின் ஓசைகளும் , பார்க்கும் மரங்களிலெல்லாம் நீர்காகமும், நாரைகளுமாய் தெரிந்தன எனது காதுகளுக்கும் கண்களுக்கும்.
நீங்களும் குளிர்காலத்தில் டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் என எங்கேனும் சென்றால் அருகிலுள்ள பரத்பூர்சென்று, பலநாடுகளும் கண்டங்களும் கடந்துவந்த பறவைகளோடு உரையாடி வாருங்கள் !
---
அன்புடன்
ப சிவலிங்கம்
Comments