top of page

இமயத்தின் இமயங்கள்-1

Writer's picture: P SivalingamP Sivalingam


கார்கில்...


சட்டென நினைவில் வருவது 1999 ஆம் ஆண்டு நடந்த போர். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நடந்த போரில் இந்தியா பாகிஸ்தானை வென்று வெற்றிக் கொடியை நாட்டியது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், இந்திய இராணுவம் திராஸ் பகுதியிலுள்ள தோலோலிங் மலையடிவாரத்தில் போர் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்துள்ளது.


நாம் இப்பொழுது இருக்கும் இடமும் அதுவே…!


இது போரில் உயிர்த் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டதாகும். இங்கு, போரின் நிலையை வெளியிட்ட அன்றைய நாளிதழ் செய்திகள், புகைப்படங்கள், வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் பெயர்கள், படங்கள், போர் குறித்த ஆவணங்கள், பதிவேடுகள், போரில் உபயோகிக்கப்பட்ட விமானங்கள், பீரங்கிகள் மற்றும் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.


1999 ஆம் ஆண்டு இப்போருக்காக நாடு முழுவதும் மக்கள் நன்கொடைகளை தந்து தங்களாலான உதவியை செய்தனர். அவ்வாறு நன்கொடை கொடுத்த மக்களின் பெயர்கள் பக்கம் பக்கமாக நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் வந்தது இன்றும் என் நினைவில் உள்ளது.


இதையெல்லாம் பார்க்கும் போதே, நமக்குள் ஒரு ராணுவ வீரன் வந்து மெய்சிலிர்க்கச் செய்கிறான்.


எதிரியிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களில் பாகிஸ்தான் நாட்டுக்கொடியும் ஒன்று. இதை பார்க்கும் போது, இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பிரபலமான பாகிஸ்தான் பெரியவர் அந்நாட்டுக் கொடியை உற்சாகத்துடன் அசைப்பதை பார்த்த நினைவுகள் வந்து போயின.


இது எதிர் நாட்டு படையிடமிருந்து கைப்பற்றப்பட்டதால், தலைகீழாக வைக்கப்பட்டு இருந்தது.


போரில் இறந்த எதிர் நாட்டவர்களையும் , உரிய மரியாதையோடு அடக்கம் செய்த புகைப்படமும் நம்மை வெகுவாக கவர்ந்தது.

அக்கணமே என்னுடைய இந்த பயணக்கதை கார்கிலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என எண்ணி மேலோட்டமாக வார்த்தைகளை கோர்த்து மனதில் நிறுத்தினேன்.


அதுதான் இதுவரை படித்ததும் கூட …!




நம்மை கவர்ந்த மற்றொன்று என்னவென்றால், இங்கிருந்து நம் நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் அஞ்சல் அட்டை அனுப்பும் வசதி. அதன் பின்புறம் கார்கில் போர் நினைவிடத்தின் புகைப்படம் அழகான தரத்தில் பதியப்பெற்றது.


இதன் விலை ரூபாய் 20. நாங்கள் வாங்கி அனுப்பலாம் என்று நினைத்து கேட்கும் போது மதிய உணவு இடைவேளைக்காக அங்காடி மூடப்பட்டிருந்தது.



"இமயத்தின் இமயங்கள்" பயண ஆசை என்னுள் கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதத்தில் மணாலி சென்ற போது தோன்றியது. அப்போது அங்கு பனிமலைகள் இல்லை. ஆனால் தூரத்தில் இருந்த பனிமலைகள் என்னை வெகுவாக கவர்ந்தது.


அப்படி பனி மலைகளுக்குக்கிடையே பயணம் செய்ய வேண்டுமானால், நாம் மணாலியிலிருந்து "லே" (ஊர் பெயர்) சென்றால் போதும்.


அவ்வாறு தோன்றிய ஆசை, நான்காண்டு கனவாக இருந்து, கடந்த ஓராண்டாக திட்டம் போடப்பட்டு , இவ்வாண்டு (2018) மார்ச் மாதம் இறுதி வடிவம் எடுத்தது.


ஒன்பது நாள் பயணமாக, சென்னையிலிருந்து விமானத்தில் ஸ்ரீநகர் சென்று அங்கிருந்து லே, நுப்ரா பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, மணாலி, டெல்லி வழியாக மீண்டும் சென்னையை அடைவது இறுதி திட்டமாக வடிவெடுத்தது.


எங்களை பற்றிய சில தகவல்களை நான் இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.


நாங்க ஆறு பேரு ..! ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர்கள். பழனிசாமி, அரவிந்த், சிவலிங்கம் , சிவகுமார், ஆதித்யன் மற்றும் கிரிதரன். அண்ணன் பழனிசாமி சுற்றுலாக்களுக்காக திட்டமிடும் அழகே அழகுதான்.


பல்வேறு இணையதளங்களை ஆராய்ந்து, மிகவும் குறைந்த செலவில் நிறைந்த அனுபவங்களோடு சென்று வருவது, எங்களது ஒவ்வொரு பயணத்தின் சிறப்பம்சமாகும்.


அதுபோலவே இந்த பயணத்திற்கும், நூறு நாட்களுக்கு முன்னதாக விமானப்பயணத்திற்கான முன்பதிவுகளை செய்து விட்டு , ஒவ்வொரு நாட்களாக எண்ணிக் கொண்டிருந்தோம்.

நாட்கள் நகர்வது கடினமாகவே இருந்தது.


பயணத்தின் ஒரு மாதத்திற்கு முன்பு , தங்குவதற்காக விடுதிகள் முன்பதிவு, தோராயமான செலவுகள் என எங்கள் அண்ணன் அனைத்து முன்னேற்பாடுகளை செய்து முடித்தார்.


இறுதியாக மாதங்கள் வாரங்களாகவும் , வாரங்கள் நாட்களாகவும் மாறி வந்தது "இமயத்தின் இமயங்கள் " பயணத்தின் முதல் நாள்.


அது கூடவே, எனக்கு வந்தது ஆட்காட்டி விரலின் பின் பகுதியில் வீக்கமும் தீராத வலியும். காரணம், சில நாட்களுக்கு முன்னர் இவ்விரலில் சிறியதாய் அடிபட்டு உட்காயமாகவே மாறியிருந்தது.

பொதுவாக புகைப்படம் எடுக்க இந்த விரலே பொத்தானை அழுத்துவதற்கு பயன்படும். அதனால் எனக்கு கவலை பற்றிக் கொண்டது.


இங்கு செல்வதே பிரமாண்டமான மலைகளின் அழகையும், பள்ளத்தாக்கு , சமவெளி மற்றும் மாசற்ற வான்வெளியையும் பார்த்து ரசிக்கவும், ரசித்ததை புகைப்படம் எடுப்பது மட்டுமே என்னுடைய எண்ணமாக இருந்தது. எங்கே இந்த ஆசைகள் எல்லாம் நிறைவேறாமல் போய்விடுமோ..! என்ற ஏக்கமும் இருந்தது. முதல் நாள் சென்னை விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து டெல்லி சென்று பின்னர் காஷ்மீர் செல்வதாக திட்டம். அவ்வாறே சென்னை விமான நிலையம் காலை 7 மணிக்கே சென்றதால் பசி கிள்ளியது. அன்று ஞாயிறு என்பதால் வெளியிலும் கடைகள் திறக்கப்படாமலிருந்துதது. 2 இட்லி 75 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு, நண்பர்கள் 6 பேரும் பயணத்தை தொடங்கினோம்.


இவ்வாறு பொது இடங்களில், மக்களுக்காக குறைந்தபட்சம் உண்ணும் உணவையாவது அதன் உரிய விலைக்கு விற்றால் அனைவரும் பயன் பெறலாம்.


இது கடைகளின் மிக உயர்ந்த வாடகையால் வரும் விளைவு…!

இப்பயணத்தில் வரும் மிக உயர்ந்த இமய மலைச்சிகரங்களில் கூட தேநீரின் விலை 20~30 மட்டுமே. ஆனால் விமான நிலையங்களில் குறைந்தபட்ச விலை ரூபாய் 80.


இங்கு விற்கும் உயர் ரக மதுபானங்கள் வெளியில் விற்கும் விலையை விட குறைவுதான்…!


இதுமட்டும் எவ்வாறு சாத்தியம்..? என்ன கொடுமை ..!

விமானத்தில் டெல்லி செல்ல சென்னையிலிருந்து பயணம் ஆரம்பித்தது.


விமானம் மேலே எழும்பியபோது , சென்னை மாநகரத்தின் வான்வெளி காட்சி என்னை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக, கத்திப்பாரா பாலமானது வண்ணத்துப்பூச்சியின் சிறகை போல் விரிந்து, அதில் செல்லும் வாகனங்கள், சிறியதாக ஊர்ந்து செல்லும் அழகு குழந்தையை போல் என்னை ரசிக்கச் செய்தது.


அவ்வப்போது எனது விரல் எதிலாவது இடித்துக்கொண்டு வலியை இன்னும் மிகைப்படுத்தியது.


ஒருகட்டத்தில் விமானப்பணிப்பெண்ணிடம் முதலுதவி கேட்க, அவர்களும் சிறிது நேரத்தில், களிம்பு தடவி பெருவிரலோடு கட்டு போட்டுவிட்டனர்.

இருந்தாலும் வலி நின்ற பாடில்லை. களிம்பு தடவிய தருணங்கள் மட்டுமே இனிமையாய் இருந்தது.


அருகிலிருந்த அண்ணன் பழனி, “என்னடா..! எப்படி இருந்தது கட்டு ? என்று கேட்க, வலி கலந்த சந்தோஷத்தில், மிகவும் ஜில்லென்று இருந்தது என பதிலளிக்க, அவ்வாறே வான்வெளிப்பயணம் நகர்ந்து கொண்டிருந்தது.


பின்னர் டெல்லி சென்று அங்கு 3 மணிநேரம் இடைவெளியில் காஷ்மீர் விமானம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த இடைவெளியில் மதிய உணவிற்காக பீசா வாங்கி தற்காலிக பசியை அடக்கிக் கொண்டோம்.


அதன் பிறகு காஷ்மீர் பயணம் ஆரம்பித்தது. காஷ்மீர் விமானத்தில் சாளர இருக்கையில் அமர, சென்னையிலே கேட்டு பெற்றதால், பனி மலைகளின் அழகை காண ஆவலுடன் காத்திருந்தேன்.

வெகு நேரமாகியும் தரைகளை மட்டுமே காண முடிந்தது. இறங்குவதற்கு 15 நிமிடம் முன்பு, தூரத்தில் பனி மலைகள் தென்பட ஆரம்பித்தது.

இருப்பினும் காற்றின் வேகமும், மேகக்கூட்டமும் அதிகமானதால் விமானம் மேலும் கீழும் அதன் பறக்கும் உயரத்தில் மாற்றம் கண்டுகொண்டிருந்தது.


விமானம் பறக்கும் உயரத்திலிருந்து திடீரென்று கீழே இறங்கும் பொது, வயிற்றில் ஏற்படும் ஒருவித உணர்வு நன்றாகத்தான் இருந்தது.

காஷ்மீர் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், உடமைகளை எடுத்துக்கொண்டு வெளிவரும் போது யூகலிப்டஸ் வாசனை மூக்கை துளைத்தது. விமான நிலையத்தில் இப்படி ஒரு வாசனையை, அதுவும் சளிக்கு உகந்த வாசனை.

பின்னர் மகிழ்வுந்தில் தால் ஏரிக்கு புறப்பட்டு சென்றோம்.

இவ்வாசனையானது எங்களது மகிழ்வுந்து பயணத்திலும் தொடர்ந்ததால், அனைவரின் உடமைகளை ஆராயும் போது, நண்பரின் பையிலிருந்த யூகலிப்டஸ் குப்பி உடைந்திருந்தது.

செல்லும் வழியெங்கும் ராணுவ வீரர்கள். எங்களுக்கோ இனம் புரியாத பயம்..! அது அனைவருக்கும் பீதியை உண்டாக்கியது. அதற்கு முன்தினம் ரம்ஜான் பண்டிகையானதால் பாதுகாப்பிற்காகவும், உள்ளூர் நிலையை அமைதியாக பாதுகாத்திடவும் இத்தனை பட்டாளத்து வீரர்கள்.

அவர்களின் கங்காணிக்கும் விதம் மிகவும் எச்சரிக்கையாக இருந்தது. மணல் மூட்டைகளுக்கு பின்னர், கம்பி வேலிகளுக்கு உள்ளே, மேம்பால தூண்களுக்கு பின்னர், மரங்களுக்கு பின்னர் என கண்காணிப்பு பிரமிக்க வைத்தது. அந்த ஊருக்கு அது புதிதல்ல. அந்த நிலைமையை பார்க்கும் நமக்கு அது புதியது போல தெரிந்தது.

அவ்வாறே, விளையாட்டாக இப்பொழுது திடீரென ஒரு துப்பாக்கியால் நமது வாகனத்தை சுட ஆரம்பித்தால் என்ன ஆகும் எவ்வாறு முன்னெச்செரிக்கைகளை கையாள்வது என பேசிக்கொண்டும், காஷ்மீரின் முழுக்கடையடைப்பாக இருந்த நகரத்தின் நிலையையும் பார்த்துக்கொண்டும் சென்று கொண்டிருந்தோம்.

விமான நிலையத்திலிருந்து தால் ஏரியானது 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஏறக்குறைய 40 நிமிட பயணம்.


திடீரென பயங்கர வெடி சத்தம்...!



நாங்கள் அனைவரும் பயந்து என்ன நடக்கிறதென்று தெரியாமல் பதறி போய்விட்டோம்.


*********************

104 views0 comments

Recent Posts

See All

Bình luận


All contents are in this blog, Copy Righted by Siva Photography.

bottom of page