top of page

தாய்லாந்தில் ஒரு நாள்

Updated: Jun 4, 2020

தூங்காநகரத்தின் பாஸ்போர்ட் அலுவலகம்..!


TCS ஊழியர் ஒருவர், “பாஸ்போர்ட் தட்கல்ல அப்ளை பனிருக்கிங்க, பாஸ்போர்ட் வழங்கும் மேலதிகாரியை பாத்துட்டு வாங்கனு” சொல்ல, நானும் சந்திக்கச் சென்றேன்.


சொல்லுங்க, “தட்கல்ல அப்ளை பண்ற அளவுக்கு என்ன அவசரம் ? ” என்று என்னுடைய விண்ணப்பத்தை பார்த்துக்கொண்டு அதிகாரி கேட்க, சில வினாடி மௌனத்திற்கு பிறகு, " அலுவலக பணியாக தாய்லாந்து போகணும்னு சொன்னா , கண்டிப்பா கொடுக்கமாட்டாங்க" பொறுமையா போங்கன்னு சொல்லி நிராகரிப்பாங்க.


இல்லேன்னா “சென்னையில் வேலை பார்த்துக்கொண்டு இங்க எதுக்கு அப்ளை பண்ணுணிங்க, என்ற கேள்வி வரும்னு சுதாகரித்துக்கொண்டு”, "கம்பெனில இருந்து ஒரு கான்பெரென்ஸ் அட்டென்ட் பன்ன ஜப்பான் போகணும்னு சொல்ல, “ஐடி ப்ரூப் கொடுங்கனு” கேட்க, நானும் வாக்காளர் அடையாள அட்டையை கொடுக்க, மற்றுமொரு ஐடி கேட்க, ஆதார் அட்டையை கொடுக்க, “முகவரி இரண்டிலும் ஒன்றாய் இல்லை, தட்கலில் தரமுடியாது, சாதாரண முறையில் வாங்கிக்கொள்ளுங்கள்” என விண்ணப்பத்தை, நார்மல் என்று சுளித்து என் கையில் தர, சுக்குநூறாய் நொறுங்கி போய் விட்டது, எனது முதல் வெளிநாட்டுப்பயணத்தின் கனவு ..!


ஏனென்றல் எனது பயண நாள் இன்னும் சரியாய் ஏழு நாட்களில் ..!


இப்போதைய நிலை பாஸ்போர்ட் இல்லை..!


வாருங்கள் பார்க்கலாம், எனது பயண அனுபவத்தை !

அலுவலகப் பணியாக இரெண்டு நாட்கள் தாய்லாந்து செல்ல எனக்கு வாய்ப்பு வந்திருந்தது. பாஸ்போர்ட் இல்லையென்றாலும் பரவாயில்லை, பயணத்தின் இரு நாட்களுக்கு முன்னர் வாங்கிவிடமுடியுமா ? எனக்கேட்க, நானும் தட்கலில் விண்ணப்பித்து மூன்று நாட்களில் வாங்கிவிடலாம், என உறுதியாய்க் கூறிவிட, எனது முதல் வெளிநாட்டுப் பயணம் உறுதியானது.


அதற்காக மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தை தேர்ந்தெடுத்து, தட்கலில் விண்ணப்பிக்க, இரெண்டு நாட்களுக்குப் பிறகே, நேரில் செல்ல இடம் கிடைத்தது.


சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் செல்ல முன்பதிவு செய்தேன். பயண நாள் அன்று அதிகாலை 4 மணியளவில் மதுரையை அடைந்தது, உயர் வகுப்புக்கான காத்திருக்கும் அறையில் இரண்டு மணி நேரம் ஓய்வெடுத்து, குளித்துவிட்டு 6 மணியளவில் ரயில் நிலையத்தை விட்டு வெளியில் வந்தேன்.

பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு காலை 11.30 மணிக்கு சென்றால் போதும் ..!


அதுவரை என்ன பண்ணுவது என்று தெரியாமல், பெரியார் பேருந்துநிலையத்தை நோக்கி நடந்து சென்றேன். சில வருடங்களுக்கு முன்னர் இதுபோன்று மதிய வேலைக்கு, அதிகாலை வந்து திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று பொழுது போக்கிய ஞாபகம் வந்தது.


அதிகாலை நடைபயிற்சியாக திருப்பரங்குன்றம் மலை ஏறுவதாய் முடிவெடுத்தேன் ..!


பெரியார் பேருந்துநிலையத்தை அடையும் தருவாயில், "கிணத்த காணோம் பாணியில்", ‘பேருந்து நிலையத்தைக் காணோமே” என திக்கி நின்றேன், சில நிமிடம் ! பிறகுதான் புரிந்தது, புதிதாய் பேருந்துநிலையம் அமைக்க வேலை நடைபெற்று வருவதாக..! (ஏப்ரல் 2019)


பிறகு ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டு, திருப்பரங்குன்றம் செல்லும் பேருந்துகள் நிற்குமிடத்திற்குச் சென்றேன். பத்து நிமிடங்களில் பேருந்து வர, மதுரையின் காலைநேரப் பயணம் அழகாய் இருந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் கோவில் வர, மலைப்பாதையை நோக்கிச் சென்றேன்.


நாற்பதைம்பது படிக்கட்டிற்குப்பிறகு கரடுமுரடான கருங்கற்பாதை சரிவாய்ச் சென்றது. அதிகரித்த இதயத்துடிப்பு, கொட்டும் வியர்வை என மேலே ஏற, காலைச் சூரியன் கண்விழித்தது.


பிறகு பாறையின் சரிவான பகுதியில் சறுக்காமல் நடந்திட, சதுர வடிவ குழிகள் செதுக்கப்பட்டிருந்தன. இதில் நடந்து செல்வதே ஆனந்தமான ஒன்று. இருப்பினும் கவனமின்றி சென்றால் இவ்வாறான பாதை கால் தசைகளை இடமாற்றிவிடும் !



கோடைகாலத்திற்கு முன்னரே மரங்கள் காய்ந்து கருகிக் கிடந்தன.




இருப்பினும் மேலே செல்லச் செல்ல, மதுரை மாநகரத்தின் எழில் கண்ணைக் கவர்ந்தது. காலை உடற்பயிற்சி செய்யும் சிறுவர்களின் உருவம் சூரிய ஒளியில் நிழலாய் தெரிவது அழகாயிருந்தது.




பிறகு காசி விஸ்வநாதர் கோவிலை அடைய, பூட்டியிருந்தது. காலை நேர நடைப்பயிற்சிக்கு மலையேறும் சில நபர்களை பார்க்க முடிந்தது.


பிறகு மலையை விட்டு கீழிறங்கி, முருக பெருமானை தரிசித்துவிட்டு, பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். வழியில் பசியெடுக்க, சாலையோரத்தில் பணியாரக்கடை தென்பட்டது. பார்க்கும் போதே அள்ளி சாப்பிடத் தோன்றியது.


பத்துரூபாய்க்கு நான்கு பணியாரம் என 8 வாங்கி உண்டால், கரைகிறது நாவிலே ! இனிப்பிற்காக வெல்லக்கட்டிகளை சேர்த்திருந்ததால் திகட்டாமல் மிகவும் சுவையாயிருந்தது. கூடவே இட்லி வாங்கி உண்டு நடையைக் கட்டினேன் பேருந்தேற ..!


அனைத்து பேருந்துகளும் கூட்டமாய் வர, ஆட்டோ ஒன்று வந்தது. பாஸ்போர்ட் ஆபீஸ் போக வேண்டுமென சொல்ல, காளவாசலில் இறங்கி மாறிச் செல்லுங்கள் என்றார்.


நானும் சரியென்று ஏறினேன். அரைமணிநேரத்திற்குப்பிறகு காளவாசல் வர இறங்கி, இன்னும் நேரமிருப்பதால் இங்கிருந்து நடந்தே போகலாம் என என்னி, நடக்க ஆரம்பித்தேன். அங்கு சென்று காத்திருந்து, உள்ளே நேரம் வாரியாக அனுப்பினார்.

உள்ளே சென்றதும் ஒரு அலுவலர் "எல்லாம் மார்ச் ஏப்ரல்-ல பாஸ்போர்ட் அப்ளை பண்ணுங்க . வருசத்துல மத்த மாசம்லாம் சும்மா இருக்கோம், யாரும் வரது இல்ல " என கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்துக் கத்திக்கொண்டிருக்க, நான் ஒரு ஓரமாக நின்று, எனது பெயர் வரும் வரை காத்திருந்தேன். ஆம் கிட்டத்தட்ட காலை 11 மணிக்கே 300 பேருக்கு மேலாக கூட்டம் களை கட்டியது!

பிறகு என் பெயர் வர, இக்கதை ஆரம்பத்தில் சொன்னதுவே !


தட்கலில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது ஒரே முகவரி கொண்ட 3 அடையாள அட்டைகள் இருக்க வேண்டும். எனக்கு அவ்வாறு இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் அமர்ந்து யோசிக்க, ஒரு தெளிவு பிறந்தது. இப்பொது இதை தவறவிட்டால் பிறகு எப்போது பாஸ்போர்ட் எடுக்க முடியும் ? அலுவலகத்தில் விடுமுறை கொடுத்து எடுக்க சொல்லும் இவ்வாய்ப்பை நழுவவிடக்கூடாது என, உறுதியாக இருந்தேன்.

தட்கல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாழும், அதன் விண்ணப்ப எண் தட்கல் அமைப்பிலிருந்ததால் எங்கும் காத்திருக்காமல் உடனடியாக 30 நிமிடத்தில் வேலை முடிந்தது. மேலும் எனது நிலையை அறிந்த அதிகாரி, “ இன்றே முகவரி சோதனை செய்ய உங்கள் ஊர் காவல் நிலையத்திற்கு தகவல் சென்று விடும் , அவர்கள் விரைவாக வேலையை முடித்தால், நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கைக்கு கிடைக்கும்” என நம்பிக்கையூட்டினர்".

சரியென்று வெளியே வந்துவிட்டேன். உள்ளே தனியார் ஊழியர்களின் வேகம், எத்தனை கூட்டத்தையும் சமாளிக்கும் விதமாக இருந்தது. பாஸ்போர்ட் அலுவலகத்தில் அரசு ஊழியர் என்று பார்த்தால் கிட்டத்தட்ட 10 பேர் இருக்கலாம். அவர்களுடைய வேலை விவரங்களை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பதே ..!

வெளியில் வந்து என்ன பண்ணலாம் ? என்று யோசித்து நின்றேன்.


முதலில் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேச, "இரெண்டு நாட்களுக்கு பிறகு வரும், அப்போது வந்தால் போதும்" எனக் கூறினார்கள். நானும், "கூப்பிடும் போது சென்னையிலிருந்து வந்துகொள்ளலாம், இப்பொழுது சென்னை போகலாம்" என முடிவெடுத்தேன் .


பின்னர் பெரியார் பேருந்து நிலையம் சென்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, மாட்டுத்தாவணி சென்று சென்னை பேருந்தேறினேன். சில நிமிடங்களில் பேருந்து புறப்பட்டு தேசியநெடுஞ்சாலையில் வேகத்தை அதிகரித்துச் சென்று கொண்டிருந்தது. தூக்கம் கண்ணைக்கட்ட, அயர்ந்து தூங்கினேன். விழுப்புரம் வந்ததும் சாலையோர உணவகத்தில் பேருந்து நின்றிருந்தது.


செல்போன் இருமுறை அலறியது. அரைத் தூக்கத்தில் எழுந்து, "ஹலோ" எனப் பேச "தம்பி பாஸ்போர்ட் அப்ளை பன்னிருந்திங்களா" எனக் கேட்க, தூக்கத்திலிருந்து எனக்கு சரியாய்க் கேட்கவில்லை.


"ஹலோ யார் பேசுறீங்க" எனக் கேட்க "தம்பி போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து கூப்பிடறோம், பாஸ்போர்ட் அப்ளை பனிருந்திங்களா" எனக் கேட்க, "ஆமா சார் இன்னைக்குத்தான் பன்னிருந்தேன் " என்றேன்.


சரி நாளைக்கு ஒரிஜினல் எடுத்துட்டு வாங்கனு சொல்லி விட " சார் நான் சென்னை போய்ட்டு இருக்கேன் , சனிக்கிழமை (இரெண்டு நாட்களுக்கு பிறகு) வரட்டா எனக்கேட்க, "நீ எப்போ வேணாலும் வா” , “நான் அந்தமாதிரி யாரும் இங்க இல்லேனு ரிஜெக்ட் பண்ணி அனுப்பீடறேனு ” சொன்னார் .


எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.


சார் இன்டெர்வியூக்கு போயிட்டு, நாளை மறுநாளாவது வருகிறேன் என்றேன். "நீ எப்போ வேணாலும் வா, வரும் போது மறுமுறை பாஸ்போர்ட் அப்ளை பன்னிட்டு வானு” பேசிவிட்டு வைத்துவிட்டார், காவல் துறை அதிகாரி..!

தூக்கம் களைந்து தெளிவாய்க் காணப்பட்டேன். என்ன செய்வதென்று தெரியவில்லை எனக்கு.!


வழியில் இறங்கி திரும்பவும் திண்டுக்கல் செல்ல விருப்பமில்லை. சென்னை சென்று இரவு தூங்கிவிட்டு, காலை கிளப்பிச்செல்லலாம் என தோன்றியது.

அவ்வாறே சென்னையை அடைய இரவு 10 மணி ஆயிற்று. பின்னர் வீட்டிற்கு சென்று பயணக்களைப்பில் தூங்கிவிட்டேன். மறுநாள் காலை எழுந்து அலுவலகத்துக்கு விடுமுறை சொல்லிவிட்டு, குருவாயூர் ரயிலில் சென்னையிலிருந்து மீண்டும் பயணம் ஆரம்பித்தது.


மாலை 3.30 மணிக்கு திண்டுக்கல் அடைந்து நேராக, காவல் நிலையம் செல்ல, அதிகாரி இன்று இரவு பணியென்பதால், 8 மணிக்குத்தான் வருவார்கள் என்றனர். என்ன செய்வது ? வீட்டிற்கு சென்று 8 மணிக்கு மேல் வரலாம் என திரும்பியபோது , உள்ளூர் திருவிழாவில் அடிதடி சண்டையிட்ட இருவரை விசாரித்துக்கொண்டிருந்தனர். ஒருவரை வெளியில் போக சொல்லிவிட்டு, மற்றொருவரை உள்ளே வைத்து விசாரித்தனர். திடீரென அலறல் சத்தம், " சார் நா ஏதும் பண்ணல, அவன்தான் அடிச்சதுனு" சொல்ல, மேலும் "சத்து, சத்து" என அடி சத்தம் கேட்டது.

காத்திருந்து, காத்திருந்து மணி 10 ஆனது. வருவாரா ? வர மாட்டாரா ? என, குழப்பத்தில் தூக்கத்தோடு காத்திருக்கையில், அழைப்பு வந்தது.


"தம்பி உங்க அட்ரஸ் எப்படி வர்றது" என கேட்க , நானும் பதில் கூற, சில நிமிடங்களில் வந்தார். பதினைந்து நிமிடங்களில் கையில் வைத்திருந்த டேப்லெட்டில் புகைப்படம், அடையாள அட்டை, முகவரி, சான்றிதழ்கள் என அனைத்தும் சரிபார்த்துவிட்டுக் கிளம்பினார்.


நானும் உடனடியாக சென்னைக்கு கிளம்பி அடுத்த ஒருமணி நேரத்தில் திண்டுக்கல் பேருந்து நிலையம் வந்தேன். வார நாட்கள் என்பதால் பேருந்துகள் இரவு 11.15 மணியளவிலும் சென்னை சென்னை என 400, 500 என கூவிக்கொண்டிருந்தனர். பயணக்களைப்பு ஆட்கொள்ள, அயர்ந்து தூங்கினேன்.


மறுநாள் சரியாய் 5.30க்கு தாம்பரம் வர, வீட்டிற்குச் சென்று தயாராகி, அலுவலகம் சென்றேன். அன்றைய நாளில் கிட்டத்தட்ட 20 முறைக்கு மேல் பாஸ்போர்ட் நிலையினை இணையத்தில் பார்த்துக்கொண்டிருந்தேன்.


இறுதியாக அன்றைய தினத்தில் பாஸ்போர்ட் அச்சாகி, பதிவுத்தபாலில் என் முகவரிக்கு அனுப்பப்பட்டது. மறுநாள் வீட்டிற்கு வர, அம்மா சென்னைக்கு வரும் தனியார் பேருந்தில் கொடுத்தனுப்பினார்.

மறுநாள் காலை சென்று அப்பேருந்தில் கேட்கும் போது, கொடுக்கவில்லை என்றனர். என்னடா இது சோதனை என்று பேருந்து அலுவலகத்தில் கேட்கும் போது "நேற்று இப்பேருந்தில் கொடுத்தனுப்ப மறந்துவிட்டேன் தம்பி, ஆதலால் பின்னே வரும் பேருந்தில் கொடுத்து அப்பேருந்து ஓட்டுனரிடம் கொடுக்க சொல்லியிருக்கேன்" என்றார்.


பாஸ்போர்ட் கைக்கு கிடைக்கும் முன்னே அது சென்னையை ஒரு சுற்று சுற்றி வந்தது. ஆம் அப்பேருந்து எழும்பூர் வழி செல்ல, பின்னர் இப்பேருந்தின் ஓட்டுநர் கோயம்பேட்டிலிருந்து காலை 8 மணியளவில் அங்கு சென்று வாங்கி வைத்திருந்தனர். இதே பேருந்து இரவு சென்னையிலிருந்து ஊருக்கு செல்லும் போது, வாங்கிக்கொள்கிறேன் எனக் கூறிவிட அன்றைய பொழுது இவ்வாறே சென்றது.


அன்றைய இரவு என் கைக்கு பாஸ்போர்ட் வந்த பிறகே நிம்மதியானது.


பத்துக்கும் மேற்பட்ட உரைகள் பைகள் என, அம்மா பத்திரமாக வைத்தனுப்பியது பூரிப்படைய வைத்தது.


மறுநாள், பாஸ்போர்ட் எண்ணை வைத்து விமானத்தின் முன்பதிவு செய்யப்பட்டது.


அடுத்த 2 நாட்களில் பயண நாள் வர, இரவு 1.10 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டேன் தாய்லாந்திற்கு..!


ஏறக்குறைய நான்கு நிமிடங்களில் சென்னையைக் கடந்து வங்கக்கடல் மீது பறந்து சென்றது.

தூக்கததிற்கு காத்திருக்கும் கண்கள் சட்டென தூங்கிப்போனது. அரைமணிநேரத்தில் விமானப்பணிப்பெண் எழுப்பி, "ட்ரிங்க்ஸ்" எனக் கேட்க, "ஜூஸ்" என்றேன். தங்கத்தை வார்த்து கண்ணாடியில் ஊற்றுவது போல, என் கையில் கிடைத்தது மாங்கனி ஜூஸ் ! கூடவே சாப்பாடு மற்றும் சிக்கன்!


பெரிய இருக்கை, இரவு உணவு, பேருக்கு ஒரு ஹெட் செட் ,போர்த்திக்கொள்ள போர்வை, மென்திரையில் ஒரு சில படங்கள், ஜன்னலில் இரவு என தூங்கிப்போனேன் !


நாள் 1 (சென்னை - தாய்லாந்து)


அதிகாலை 6 மணிக்கு சற்று முன்னர், தாய்லாந்தின் மொத்த நகரமும் வண்ண விளக்குகளால் கண்கவர்ந்தது.


இறங்கி வந்து விசா எடுத்துக்கொண்டு, தங்கும் விடுதியை அடைய 8 மணியானது.


பிறகு காலை உணவு உண்டு, அலுவலக பணி ஆரம்பமானது.

அதன் பின்னர் மோட்டார் வாகனக் கண்காட்சி பார்த்துவிட்டு, இரவு உணவு முடித்து, 9 மணிக்கு மீண்டும் அறைய அடைந்தேன்.


2 நாட்களாக தூக்கமின்மையால் உடலே தள்ளாடிக்கொண்டிருந்தது.


சென்னை திரும்ப நாளை இரவு 9.30 மணிக்கு முன்பதிவு செய்திருந்தேன்.


நாளை பட்டாயா அருகிலிருக்கும் கோலன் தீவிற்குச் சென்று வண்ணமயமான கடற்கறையை புகைபடமெடுக்க ஒரு திட்டம் வைத்திருந்தேன்.


ஆனால் பயணக்களைப்பு என்னை, நாளை முழுவதும் அறையிலே தூங்கச் சொல்லியது !



ஒருபுறம் இவ்வளவு தூரம் வந்து தூங்கிச்செல்வதா ? என்றது. அந்த ஒரு மெல்லிய யோசனையில் தான், நாளைய பொழுது அடங்கியுள்ளது ! எனத் தோன்றியது. “நாளைக்கு சீக்கிரமா எந்திருச்சு, கிளம்பி அந்த தீவுக்கு போறோம், போட்டோ எடுக்குறோம்னு” முடிவு செய்தேன்.


சில நிமிடங்களில் திட்டமிட்டு, குறிப்பெடுத்துக்கொண்டு தூங்கச்சென்றேன்.

நாள் 2: (தாய்லாந்து - பட்டாயா -சென்னை )


அதிகாலை எழுந்து, குளித்து கிளம்பி விடுதியை காலிசெய்துவிட்டு, மகிழ்வுந்துக்காகக் காத்திருந்தேன்.


வீதியில் நான்கைந்து நபர்கள் "மாப்ள நயிட்டு சரியான தலைவலி டா என்னு ஒருவர் பேச , நீ குடிச்சு குடிச்சு எடுத்தா அப்பறம் என்ன ஆகும் " னு பேசிக்கொண்டிருக்க, தமிழா ? னு கேட்க ஆமா என்று கூறி பேசிக்கொண்டிருந்தோம். மலேசியால வேல பாக்குறோம், அப்டியே டூர் வந்தோம் என்றனர். அனைவரின் கண்ணிலும் மப்பு தெரிந்தது.! "நீங்க என்னா தனியா வந்துருக்கிங்க" என்று கேட்க, என்னுடைய திட்டத்தைக் கூறிவிட்டு, மகிழ்வுந்து வர அதில் ஏறிச்சென்றேன்.


15 நிமிடங்களில் "எக்காமாய் பேருந்து நிலையம்" சென்றடைந்தேன். பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு அரைமணி நேரம் காத்திருக்க வந்து நின்றது மினி வேன். கடகடவென வண்டி நிரம்ப, விர்ரென சென்றது பட்டாயா நோக்கி !


தேசிய நெடுஞ்சாலை ! ஆதலால் வேகத்திற்கு குறைவு இல்லை. நகரத்தில் பெரும்பாலும் மிளிரும் அடுக்குமாடிகள் ! நகரத்தை விட்டு வெளியே செல்ல, தொழிற்சாலைகள் பிறகு விவசாய நிலங்கள், ஆங்காங்கே ஆறுகள் என மாறிக்கொண்டே வந்தது நிலத்தோற்றம். தூக்கம் கண்ணை கட்டியது !


இருப்பினும் அரை தூக்கத்திலும் வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றேன் .

வழியில் சாலையோர உணவகத்தில் காலை உணவு உண்டு மீண்டும் கிளம்பினோம் ! சரியாக 9 மணியளவில் பட்டயாவிற்கு முன்னே இறக்கி விட அங்கிருந்து "நீர் வாழ் உயிரி அருங்காட்சியகத்துக்கு" வாடகை மோட்டார் சைக்கிளில் 15 நிமிடம் சென்றேன்.

500 பாட் கொடுத்து நுழைவு சீட்டைப் பெற்று நுழைந்தால் வண்ண வண்ண மீன்கள் வரவேற்றன. பாம்பு மீன்கள், வௌவால் மீன்கள், ஜெல்லி மீன்கள் , பெரிய சுறா என கடலுக்கடியில் இருந்து பார்ப்பதை போல் இருந்தது.


எனக்கு பெரிதாக ஆர்வம் இல்லை இருந்தாலும் இவற்றை ரசித்து மகிழும் குழந்தைகளைக் கண்டு நான் மகிழ்ந்தேன்.



அவர்களின் ஆர்வம், பயம், சிரிப்பு என மீன்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தன. ஏறக்குறைய 1 மணி நேரம் செலவிட்டேன். பின்னர் வெளியே வந்து கோலான் தீவிற்குச் செல்லத் தயாரானேன்.

வெகு நேரமாகியும் இருசக்கர வாடகை வண்டியேதும் வரவில்லை. அரைமணிக்கு நேரத்திற்கு பிறகு என பார்த்துவிட்டு ஒருவர் வர, "வாக்கிங் ஸ்ட்ரீட் செல்ல வேண்டும்" எனக்கூற அடுத்த 15 நிமிடத்தில் அங்கு சென்றேன். இரவில் வண்ணமயமாக ஜொலிக்கும் இவ்விடம் ஊரடங்கை போல் ஆட்களின்றி காணப்பட்டது.


வெயிலும் கொளித்திக்கொண்டிருந்தது. அங்கிருந்து 400மீட்டர் நடந்து மோட்டார் நிற்குமிடத்திற்குச் சென்றேன். ஆட்களை ஏற்றிக்கொண்டு விர்ரென நீரைக் கிழித்து சென்று கொண்டிருந்தது. நானும் விலையை விசாரித்து 300 பாட் எனக்கூற ஏறிக்கொண்டேன்.


இங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் கோலான் தீவு உள்ளது. ஏறக்குறைய 4 கிலோமீட்டர் நீளமும் 2 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த சிறிய தீவைச் சுற்றிலும் 5 கும் மேற்பட்ட அழகிய கடற்கரைகள் !


நியல் , பிரிஸ், சமி , தயின், தவான் என கடற்கரைகளின் பெயர்கள்.


நான் படகில் பின் பகுதியில் இயந்திரத்தின் அருகில் அமர்த்திருந்ததால், நீரை கிழித்துக்கொண்டு செல்வதை நன்றாக ரசித்துக்கொண்டு செல்ல முடிந்தது. மோட்டார் படகும் அவ்வப்போது ஒருபுறம் சட்டென்று சாய்ந்து நீர்திவலைகளை உள்ளே கொட்டிச்சென்றது.


பயணிகள் சற்றும் எதிர்பாராததால் கூச்சலிட்டனர்.

இவ்வாறே 20 நிமிடத்தில் தீவை அடைந்தோம். அங்கிருந்து சென்று தீவை சுற்றி பார்க்க ஸ்கூட்டர் வாகனங்கள் எண்ணற்றவை இருந்தது. நாள் வாடகையாக 300 பாட் சொல்ல, சற்று யோசித்தேன்.



நாமோ இங்கு சில மணி நேரங்கள் மட்டுமே செலவிடப் போகிறோம் குறைத்து கேட்டார்களாம் என்று தோன்றியது . யோசித்து அவரையும் சேர்த்து வாடகைக்கு எடுத்தேன் ! ஆம் "3 மணிநேரத்திற்கு நீங்கள் வாகனம் ஓட்டுங்கள், ஒவ்வொரு கடற்கரையிலும் புகைப்படம் மட்டும் எடுப்பேன்" என கூட்டிச்சென்றேன். அவரும் சம்மதிக்க கிளம்பிச் சென்றோம்.


காமெராவை கையில் வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொன்டே சென்றேன். 10 நிமிடத்தில் நியல் கடற்கரை வர , "இங்கே நில்லுங்கள் வருகிறேன் என்று கூறிவிட்டு" கடற்கரைக்குச் சென்றேன்.


"வாவ்" என்றிருந்தது ! இளம்பச்சை நீரும், அடர் பச்சை மரங்களும், வெண்பழுப்பு மணலும் , நீல வானமும் கண்களை கூசச்செய்தது. இதுமட்டுமா ! வெண்தோலில் சிற்றாடை மறைத்து, மணலில் படுத்து, வெயிற்காயும் அழகிகளை பார்த்து, கூசிய கண்கள் கூரானது !

"வந்த வேலைய பாருடா" என்று எனது கேமரா கூற கண்களை மீண்டும் கூசும் காட்சிகளை படமெடுத்தேன்.


அரைமணி நேரத்தில் அங்கிருந்து சமி கடற்கரைச் சென்றேன். துள்ளித்திரியும் சிறுவர்களை படம் எடுத்துக்கொண்டு சற்று நேரம் மணலில் அமர்ந்தேன்.

வெயில் ஆனால் இதமாயிருந்து. உப்புக்காற்று துளியும் இல்லை. சில்லென்ற உணர்வே இருந்தது.

இதே நண்பர்களுடன் வந்துருந்தால், நாள் முழுவதும் நீரில் ஆட்டம் போட்டிருக்கலாம் என்ற ஏக்கம் இருந்தது.

இப்படி தனியாக வந்து அவசரமாக பார்த்துவிட்டுச் செல்வது என்பது பிடிக்கவில்லையென்றாலும், தங்கும் விடுதியிலே இருந்திருந்தால், இதைக்கூட கண்டிருக்க முடியாது.


இங்கொரு அரைமணி நேரம் ! மீண்டும் அடுத்த கடற்கரை தயின் . இங்கு வந்தவுடன் பசியெடுக்க சிக்கன் ஒன்றை வாங்கிக்கொண்டு மெதுவாய் நடந்து சென்றேன்.


மரப்பலகையில் அமைக்கப்பட்டிருந்த பாதையில் ஒய்யாரமாகச் சென்றது சிறப்பு ! தூரத்திலிருந்தே புகைப்படம் எடுத்துக்கொண்டு மீண்டும் வாகன நிறுத்தத்தை அடைந்தேன்.


அடுத்த சில நிமிடங்களில் தவான் கடற்கரை அடைய , இங்கே தான் அடுத்து படகு பட்டயாவிற்கு செல்லும், வாகனம் எடுத்த இடத்திலிருந்து செல்லாது எனக்கூறி பணத்தை வாங்கிக்கொண்டு விர்ரென பறந்து சென்றார்.

நானும் ஒன்றும் புரியாமல் வரைபடத்தை பார்த்துவிட்டு , மீண்டும் சாப்பிட சிக்கன், ஜூஸ் வாங்கிக்கொண்டு கடற்கரையோரமாக அமர்ந்தேன்.



நீர் விளையாட்டு, நீர் மோட்டார் சைக்கிள், விரைவுப்படகு என விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தது. காலநிலையும் வெயில் சென்று மாலையில், மலையில், மழை வரும் சூழலைத் தந்தது. மாலை ஆறு மணிக்குள் சுவர்ணபூமி விமான நிலயத்தை அடைய வேண்டும் என்ற எண்ணமும் அடிக்கடி வந்து சென்றது.



பின்னர் படகு நிற்குமிடத்தில் சென்று மெதுவாய்ச் செல்லும் படகில் 30பாட் கொடுத்து அமர்தேன். இது ஏறக்குறைய 50 நிமிடம் எடுத்துக்கொள்ளும் பட்டாயா செல்ல. கோலான் தீவிற்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. மெதுவாய் நகர மாலைச் சூரியனும் மலையில் பின்னே செல்ல படகு வேகமெடுக்க தொடங்கியது. படகில் ஏறக்குறைய 250 பேருக்கு மேல் அமர்த்திருந்தனர்.


பயணகளப்பில், படகில் மோதி நுரையாய் அலையாய் செல்லும் நீரை கண்டு ரசித்துக்கொண்டே வந்தேன். பட்டாயா வந்ததும் ஒரு உணவகத்தில் கேக், ஜூஸ் என சாப்பிட்டுவிட்டு, வாடகை மோட்டார் சைக்கிளில் பேருந்து நிலையம் அடைந்தேன்.

இங்கிருந்து விமான நிலையம் அடைய குளிர் சாதன பேருந்து வசதி அடிக்கடி இருந்தது. 250 பாட் கொடுத்து விட்டு ஏறி அமர்ந்து கண்ணயர்ந்தேன்.


மாலை 6.30 மணிக்கு விமானநிலையம் அடைந்து உள்நுழைந்தேன். விமான நேரம் இரவு 10.30.

எனதருகே சென்ற நபர் தமிழில் "என்னப்பா புக்கட் அளவுக்கு பாங்காக் இல்லையே ஒரே டிராபிக், சே ! " இந்த டூர் வேஸ்ட் என புலப்பிக்கொண்டு வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில் செல்ல, பேச்சு கொடுத்தேன், "அண்ணே எந்த ஊரு என்று?" என்னப்பா நம்ம ஊரு ஆளா என்று பேசிக்கொண்டே நடந்தோம்.


இரெண்டு மணிநேரம் அங்கும் இங்கும் சென்று, பரபரப்பான விமான நிலையத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு விமானத்தில் ஏறி சென்னையை அடைய மணி நள்ளிரவு 1 ஆனது.

பாஸ்போர்ட் எடுப்பதிலிருந்து செல்லும் வரை எத்தனை தடங்கல் , சிரமம் மற்றும் திருப்பங்கள்.

"எதுக்குடா இப்டி கஷ்டப்பட்டு போகணுமா' என்றிருந்தது. அனைத்தையும் கடந்து, அங்கு சென்று வந்தது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது.

இக்கதை, சுற்றுலாவைப் பற்றிய தகவல் தெளிவாய் இல்லாமலிருப்பினும், திட்டமிடல், வாய்ப்பு , தனியாய் செல்வது, புகைப்படம் என்ற அனுபவத்திற்காக "கொரோனோ ஊரடங்கில்" பொழுதுபோக்கிற்காக எழுதப்பட்டதே !


என்றும் அன்புடன்,

ப. சிவலிங்கம்.

89 views0 comments
bottom of page