top of page

பொழில் (2)

நாள் 4:



அடுத்த நாள் காலை எழுந்து ஒவ்வொருவராய்க் குளித்துக் கிளம்ப, பாதி பேருக்கு வெந்நீர் வரவில்லை. சகித்துக்கொண்டு அனைவரும் தயாராகி, காலை உணவாக பிரட் மற்றும் காபி சாப்பிட்டுவிட்டு, கிளம்பினோம் ஜீரோ பாய்ண்ட் மற்றும் யம்தங் பள்ளத்தாக்கை ரசிக்க ! காலை வெயில் குளிருக்கு இதமாய் புத்துணர்ச்சியூட்ட, வாகனம் சென்று கொண்டிருந்தது. சில நிமிடங்களில் வெண்ணிற கழிமணலில் இளம்பச்சை நிறத்தில் பனியாறு ஓடிக் கொண்டிருந்தது.


சாலையின் இருபுறமும் பைன் மரங்கள். பைன் மரத்தடிகள் பசுமை நிறப் பாசிகளால் போர்த்தப்பட்டு, எங்கும் பசுமையாகக் காட்சியளித்தது. ஒற்றை வண்டி மட்டும் செல்லும் குறுகலான தார் சாலையில் திணறித் திணறி சுற்றிச் சுற்றி மேலே சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர், குளிர் காலங்களில் இக்காடுகள் அனைத்தும் முழுவதும் பனிபோர்த்தி, வெண்ணிற பைன் மரங்கள்களைப் பார்ப்பதற்கு அருமையாக இருக்குமெனக் கூறினார்.



கண்களை மூடி இப்பசுமைக்காடுகளை பனிக்காடுகளாக கற்பனை செய்தேன் ! வெண்ணிற மாரி பொழிய, அதில் நனைய ஆசைப்பட்ட பைன் மரங்கள் முழுவதும் நிறமாற, இலைகளின் நுனியில் சொட்டும் உருகிய நீரும், உறைய போகும் நீரும், அதனால் உருவாகும் ஊசியான பனிக்கட்டியும், தரைகளைப் போர்த்திய பனிகளும் என்னவென்று சொல்லுவது ! ஒருமணி நேரப் பயணம் எங்களை யம்தங் பள்ளத்தாக்கை அடையச் செய்தது. ஜீரோ பாய்ண்ட் பார்த்துவிட்டு வரும்போது இங்கு பார்த்துக்கொள்ளலாம், என நிற்காமல் சென்றோம். இதனையடுத்த பயணம் கொண்டை ஊசி வளைவுகளோடு மேலே சென்று கொண்டிருந்தது இந்தியா சீனா எல்லைக்குக்கு மிக அருகில் ! மலைகளின் வண்ணங்கள், அதில் வளர்ந்துள்ள செடிகள், பாசிகள், பூக்களைப் பொருத்து ஆங்காங்கே வேறுபட்டன. பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் மேலிருந்து யம்தங் பள்ளத்தாக்கின் மொத்த அழகையும் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.


இருபுறமும் மலைகள், நடுவே ஓடும் பனியாறு , அதனிருபுறமும் பைன் மரங்கள், ஊர்ந்து செல்லும் மேகங்கள் !


பிறகு சோதனைச் சாவடி வர, ஓட்டுநர் சென்று அடையாைள அட்டை காண்பித்து வர மேலே சென்றோம். சரியாக, அரை மணிநேரத்தில் அடைந்தோம் ஜீரோ பாய்ண்ட்-ஐ . இதற்கு மேல் செல்ல அனுமதியில்லை. சீன எல்லைக்கு அருகே ராணுவ முகாமிருப்பதால், ராணுவப் பயன்பாட்டிற்கு மட்டும் சாலையிருந்தது !

ஏறக்குறைய ஒருமணிநேரத்துக்கு மேல் இங்கு செலவிட்டோம். தூரத்துப் பனிமலைகள், செம்பழுப்பு நிற மலைகள், உருகியோடும் பனியாறு, அதில் நனைந்திடும் கற்கள் என எனது புகைப்பட ஆர்வத்திற்குத் தீனி போட்டது இந்த சூழல் !


அவ்வாறே அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு புறப்படத் தயாரானோம்.

வரும் வழியில் மீண்டும் பள்ளத்தாக்கு, கொண்டை ஊசி வளைவு என அதே காட்சிகளிருந்தும் பசி எடுக்க ஆரம்பித்தது.

கீழே யம்தங் பள்ளத்தாக்கில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என வந்து கொண்டிருந்தோம்.


பள்ளத்தாக்கு, சாலையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்தது. அங்கு சென்று, ஓடிக்கொண்டிருக்கும் பனியாற்றில் கால் வைக்க "ஜிவ்" வென்றது. லேசான மழை தூற, கிளம்பினோம் வாகனத்திற்கு !


வரும் வழியில் மதிய உணவு ஏதும் இல்லாததால் சங்தங் சென்று சாப்பிட்டுக்கொள்ளலாம் எனக் கிளம்பினோம்.

மாலை 4 மணியளவில் சங்தங் அடைந்து சாதம், பருப்பு, சிக்கன் என சாப்பிட்டுவிட்டு கேங்டாக் செல்லத் தயாரானோம். செல்லும் வழியில் ஆங்காங்கே ஆறுகள் அதே வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. இவ்வாகனத்தில் மூன்று நாள் சுற்றியதே தெரியாமல் பயணம் முடிவடையும் தருவாய் வந்தது.


கூடவே இளையராஜா மற்றும் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் 90ஸ் பாடல்கள் தூக்கத்தை வரவழைத்தது. இறுதியாக கேங்டாக் வந்து ஓட்டுனரிடம் பேசியதைவிட 500 அதிகமாய்த் தந்து, வாழ்த்தி விடைபெற்றோம். மீண்டும் அதே தங்குமிடம் அதே மாடி !

இன்று ஆதிக்கு பிறந்தநாள். ஆதலால் உடனடியாக கிளம்பினோம் உணவகத்திற்கு ! நல்ல உணவகத்தில் நீரும் சோறும் உண்டுவிட்டு, கேக் ஒன்றை வாங்கிக்கொண்டோம், நாளை செல்லவிருக்கும் நாதுலா என்ற இடத்தில் வெட்டுவதற்கு !

நாள் 5:


இன்று சிக்கிமில் உள்ள நாதுலா சென்றுவிட்டு மீண்டும் கேங்டாக்கிலிருந்து மகிழ்வுந்தில் நியூ ஜல்பைகுரி (மேற்குவங்கம்) சென்று, அங்கிருந்து ரயிலில் அசாம் தலைநகர் கவுகாத்தி அடைந்து, மேகாலயாவுக்கு மகிழ்வுந்தில் செல்வது எங்கள் திட்டம்.

காலை 8 மணியாகியும் நாதுலா செல்ல அனுமதி கிடைக்காததால் காத்திருந்தோம் கேங்டாக்கில். இதற்காக நமது புகைப்படம் அடையாள அட்டையோடு சிக்கிம் மாநில அரசிடம் விண்ணப்பித்து, அனுமதி வாங்க வேண்டும்.ஏனென்றால் இவ்விடமும் சீன எல்லைக்கருகில் இருப்பதால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனமும், நபர்களும் மட்டுமே அனுமதி கிடைக்கும். நாங்கள் ஏற்கனவே தங்குமிட உரிமையாளரிடம் பேசி விண்ணப்பித்திருந்தோம். அது மறுநாள் காலை நாம் முன்பதிவு செய்திருந்த வாகன ஓட்டிகளுக்கு கிடைத்துவிடும். அரை மணி நேரம் கழித்து அனுமதி கிடைக்க, கிளம்பினோம் சீன எல்லைக்கு ! செல்லும் வழியில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு, டாடா சுமோ சென்று கொண்டிருந்தது. மேலும் ஓட்டுநர் பாக்கு போட்டுக் கொண்டு ஜன்னல் வழியே துப்பிக்கொண்டு வந்தார் . வழியில் ஒரு உணவகத்தில் காலை உணவு உண்டு, மதிய உணவிற்கும் சொல்லிவிட்டுச் சென்றோம். ஏறக்குறைய 2 மணி நேரத்திற்கு பிறகு, நாதுலாவை அடைந்தோம். குளிர் என்றால் இதுதான் குளிர் என்று சொல்லும் அளவுக்கு வாட்டியது. மேலும் மூச்சு விடுவதுகூட மிகுந்த சிரமாக இருந்தது.

கடல் மட்டத்திலிருந்து 4300மீட்டர் உயரத்திலிருப்பதால் இந்த நிலை !


தரையிலிருந்து ஏறக்குறைய 100 படிக்கட்டுகள் மேலே ஏறிச்சென்று சீனா எல்லையை கண்டு ரசித்தோம். பெரிதாய் ஒன்றுமில்லை, ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் மட்டுமே! புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி இல்லை தவறினால் கருவிகள் பறிக்கப்படும். பறிக்கப்பட்டதை நேரிலும் பார்த்தோம்.

கீழே இறங்கி வரும்போது இங்கே சென்று வந்ததற்கான சான்றிதழ்கள் வழங்கினர். விசாரிக்கும் போது ஒருவருக்கு 80 ரூபாய் என்றனர். குறிப்பிட்ட சிலர் அதை வாங்கிக்கொண்டு கீழே வந்து நாதுலா பாஸ் என்றிருந்த மைல் கல்லின் முன்னே ஆதிக்கு பிறந்தநாள் கேக் வெட்டத் தயாரானோம். மற்ற சுற்றுலா பயணிகளும் சேர்ந்து கொள்ள "ஹேப்பி பர்த்டே ஆதி " என்று கத்திக்கொண்டிருக்க கேக் வெட்டும் போதே முஸ்தாக் அவரது வேலையை ஆரம்பிக்க, அனைவர்க்கும் பகிர்ந்தோம் இனிப்பை !

அவ்வாறே அங்கிருந்த அழகு மங்கை ஆதிக்கு இனிப்பை ஊட்ட வாயடைத்து நின்றோம். ஆதியும் விரல்களை கடிக்காமல் இனிப்பை மட்டும் சுவைக்க அவ்வாறே நகர்ந்தோம்.யை இவ்வளவு சுற்றுலா பயணிகள் வரும் இந்த இடத்தில் கழிவறை இருந்தும் இல்லாதது போல் கோட்பாடற்றுக் கிடந்தது பராமரிப்பின்றி !

எங்கள் அனுபவத்தில் நாதுலா செல்வதற்கு கேங்டாக், லாச்சென் மற்றும் லாச்சங் இடங்களுக்குச் சென்று இயற்கையை ரசிக்கலாம். அவ்வாறே திரும்பி வந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். மாலை கேங்டாக் அடைந்து தங்கும் விடுதியில் ஓய்வெடுத்துவிட்டு தயாரானோம் மேகாலயா செல்ல ! மாலை 5 மணிக்கு வரவேண்டிய வண்டி, 6.30க்கு வந்தது. இங்கிருந்து செல்ல குறைந்தபட்சம் 5மணி நேரமாவது வேண்டும். இருப்பினும் "ஓட்டுனரிடம் விரைவாகச் செல்ல வேண்டும்" எனக்கூற மலையில் கொண்டை ஊசி வளைவுகளும் நேரான சாலை போல் வாகனம் பறந்தது.


கடைசி நான்கு நாட்கள் டாடா சுமோவில் நெருக்கமாக பயணித்து, தற்போது இன்னோவாவில் செல்வது இதமாய் இருந்தது எங்களுக்கு !. மற்றொரு வாகனம் சுசூகி வாகனரில் நான்கு பேர் வர, பயணம் தூக்கத்தோடு சென்று கொண்டிருந்தது. இரவு உணவிற்கு எங்கும் நிற்காமல் ஓரிடத்தில் நின்று தேநீர் மட்டும் அருந்திவிட்டு மீண்டும் பயணம் தொடர்ந்தது.


மலை அடிவாரத்தைக் கடந்து நகருக்குள் வந்தால் ஆயுதபூஜா விழாவினால் போக்குவரத்து நெரிசல் அதிகமாயிருந்தது. அதையும் கடந்து இரவு 10.30 மணிக்கு ரயில் நிலையத்தை அடைந்தோம். இன்னும் ரயில் வர 1மணி நேரமிருப்பதால் அருகிலிருக்கும் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு நடைமேடையை அடைந்தோம்.


ரயிலை எதிர்நோக்கி அனைவரும் தூங்கிப்போனோம். நடைமேடை நன்கு பராமரிக்கப்பட்டு தூய்மையாய் இருந்தது. 1.30 மணி நேர தாமதத்தோடு 1 மணிக்கு வந்தது ரயில். பெங்களூரு -அருணாச்சலப்பிரதேஷ் செல்லும் ரயில் வரும்போதே துர்நாற்றத்தை இழுத்துக்கொண்டு வந்தது. ஒருவழியாக முன்பதிவு செய்த பெட்டியில் ஏறி இடத்தை அடைந்தால் , யார் யாரோ தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களை எழுப்பி நாங்கள் அமர்ந்து தூங்க ஆரம்பிக்க, அரைமணிநேரம் ஆனது. பூஜா விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் நபர்கள் முன்பதிவு செய்யாமல், இப்பெட்டியில் தாராளமாய்த் தூங்கிக் கொண்டு வந்தனர்.


நாள் 6:

மறுநாள் காலை ரயில் 3 மணி நேர தாமதம் ! காலைக் கடனை முடிக்க கழிவறைக்குச் சென்றால் வாய் வழியாக அனைத்தும் வந்துவிடும் அளவுக்கு இருந்தது.


அடக்க ஆரம்பித்தோம் முடியவில்லை. காலை 8 மணிக்கு ஓரிடத்தில் ரயில் நிற்க, கீழே இறங்கிச் சென்று ஓரிடத்தில் சிறுநீர் கழித்துவிட்டு ரயிலேறினோம் நிம்மதிப் பெருமூச்சுடன் !


"வடஇந்திய ரயில் பயணங்கள்" என்ற கட்டுரை எழுதுமளவிற்கு அனுபவப்பட்டோம். நாறிப்போன பயணத்தைப் பற்றி கட்டுரை எழுதி வீணடிக்காமல் மீண்டும் தூங்கச்சென்றேன். 9 மணிக்குச் செல்லவேண்டிய ரயில் 12.30 மணிக்கு சென்றது கவுகாத்திக்கு! அடுத்த நான்கு நாட்களுக்கு நாங்கள் ஊர் சுற்றப் போகும் வாகனமும் டாடா சுமோ ! அதுவும் காத்திருந்து எங்களுக்காக ! ரயில் நிலையத்திலிருந்து வெளியே வர, வெயில் பிளந்து கட்டியது . நாங்கள் மேற்குப்புறம் செல்ல, ஓட்டுநர் கிழக்கு வாயிலில் காத்திருக்க, பின்னர் மேற்கு வாயிலுக்கு வரச் சொல்ல, அரைமணி நேரத்திற்குப் பிறகு வரமுடியவில்லை எனக் கூற, இவ்விடைவெளியில் முஸ்தாக், வயிற்றிற்குத் தீனி போட , மீண்டும் கிழக்கு வாயிலுக்கு அலைய, "முடியலடா சாமி" என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம்.


ஓட்டுனரிடம் நல்ல உணவகத்தை நோக்கிச் செல்லுமாறு கூறினோம். நகரத்தை கடந்து செல்லும் போது ஒரு நல்ல உணவகம் தென்பட அனைவரும் சென்றோம்.

7 பேரும் ஒவ்வொருவராய்க் கழிவறைக்கு சென்று தூய்மையானோம்.


"என்ன சார் வேணும்" என்று கேட்க, பிரியாணி என்று சொல்ல, "இல்லை " என பதில் வர , என்னது ! பிரியாணி இல்லையா ? என இடத்தைக் காலி செய்தோம். எங்களுக்கோ, வந்த வேலை முடிந்தது என்ற பெருமிதம் ! அவர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை ! பின்னர் நல்லதொரு தாபாவில் நன்றாகச் சாப்பிட்டுக் கிளம்பினோம் மேகாலயாவிற்கு ! ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அசாம் மாநிலத்தைக் கடந்து மேகாலயாவின் எல்லையைக் கடந்தோம்.

பசுமை நிறைந்த மலைத்தொடரில் நான்கு வழி சாலையில் வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தோம். மலைத்தொடராய் இருந்த போதிலும் கொண்டை ஊசி வளைவோ, மேடாகவோ இல்லாமல் சமமாக இருந்தது.


நேற்றைய ரயில் பயணம், உடலைச் சோர்வாகவும், வியர்வையாகவும் மாற்றியிருந்தது. நல்லதொரு மழையோ அல்லது அருவியோ கண்ணில்பட்டால் குளித்து விட வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே மனதில் ஓடியது.


20 கிலோமீட்டர் சென்றவுடன் சாலையோரப் பழக்கடையில் நிறுத்தி அண்ணாச்சி, கொய்யா, பப்ளிமாஸ் பழங்களைச் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். அடுத்த சிலநிமிடங்களில் கொட்டும் மழை ! சாலை தெரியவில்லை. மேகாலயாவின் மேகங்கள் கொட்டிய மழையை வாகனத்திலிருந்தவாறு ரசித்துக்கொண்டும் நனைந்து கொண்டும் சென்றேன். நேரம் செல்லச் செல்ல மாலை மறைந்து இரவு தொடர்ந்தது. மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கை கடந்து செல்கையில் போக்குவரத்துக்கு நெரிசல் அதிகமாகி மெதுவாய் ஊர்ந்து சென்றோம். எங்களது இலக்கு இங்கிருந்து 60கிலோமீட்டர் தொலைவில் உள்ள தயர்னா கிராமம்.

இரவு அங்கு சென்று தங்கியாகவேண்டும். வாகனம் சென்று கொண்டே இருந்தது. வழியில் இரவு உணவு உண்டு விட்டுக் கிளம்பினோம்.

கிராமத்தின் 10 கிலோமீட்டர் முன்னதாகவே பிரதான சாலையிலிருந்து பிரிந்து, குண்டும் குழியுமாக குறுகிய சாலையில் சென்று கொண்டிருந்தோம். இரவு ஒன்பது மணியளவில் கிராமத்தை அடைந்தோம். ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த விடுதியின் உரிமையாளர் "லும்லாங்" க்கு அழைப்பு விடுக்க, அடுத்த பத்துநிமிடத்தில் "ஏய் ஜும்பா ஜும்பா " ஸ்டைலில் தலையில் மின்விளக்கோடு வந்துநின்றனர். நாங்களும் உடமைகளோடு நடக்கத் தயாரானோம்.

சிறிய கான்கிரீட் படிக்கட்டில் செடிகளுக்கிடையே டந்து சென்றோம். எங்கும் கும்மிருட்டு, ஆங்காங்கே சில வீடுகள்! வனத்தின் இருள் அதன் ரீங்காரம் என சென்றுகொண்டிருந்தது. பத்துநிமிடத்தில் தங்கும் விடுதி வர, நாங்கள் 3 அறைகளில் தங்கினோம். மிகவும் எளிமையான அறைகள் ! கட்டில், போர்வை, தலையணை, மின்விசிறி, கொசுவலை, மின்விளக்கு என தேவையான அனைத்து வசதிகளும் அமையப்பெற்று இருந்தது. கழிவறை பொதுவானதாக வெளியே இருந்தது.



நண்பர்கள் ஒரு அறையில் குளிர்பானங்களை அருந்த, நானோ முதலில் குளிக்க வேண்டும் என ஆடைகளைக் களைந்து ஓடினேன் குளிக்க !


ரயில் பயணங்களின் நினைவுகள் மற்றும் அனுபவங்கள், குளித்த நீரோடு சென்று கொண்டிருந்தது ! பத்துமணிக்கு மேல் தூக்கம் கண்ணைக் கட்டியது. நாளைக்கு ஏறக்குறைய 14ஆயிரம் படிக்கட்டுகள் இம்மழைக்காட்டிற்குள் நடந்து செல்லவேண்டியிருப்பதால் ஓய்வு தேவைப்பட்டது எங்களுக்கு !

நாள் 7

காலை 6 மணிக்கு எழுந்து வெளியே வந்து பார்க்கும் போதுதான் தெரிந்தது சிரபுஞ்சியின் அழகு !

சுற்றிலும் மலைகள், மலைகளில் ஆங்காங்கே காலைச்சூரியனின் வெளிச்சம் என இரவில் நாங்கள் பார்த்திராத கட்சியை அளித்தது.



கிழக்கு காசி மலைத்தொடரில் அமைந்துள்ளது இந்த தயர்னா கிராமம்.

இங்கிருந்து நான்கிரியட் எனும் கிராமத்திற்கு செல்லும் போது மர வேர்களினால் ஆன பாலம் காட்டாற்றின் நடுவே அமைக்கபட்டுள்ளது. ஓரிடத்தில் ஓரடிக்கிலும் மற்றொரு இடத்தில் இரெண்டடுக்கில் மர வேர்ப்பாலம் உள்ளது. மேலும் அங்கிருந்து சென்று நாங்கள் பார்க்கப் போகும் இடம் ரெயின்போ அருவி.


இன்றைய நாள் முழுவதும் இந்த கட்டிற்குள்ளே !

அவ்வாறே அனைவரும் குளித்துக் கிளம்ப, காலை உணவாக பிரட் ஆம்லெட் வர அனைவரும் நன்றாய் சாப்பிட்டுவிட்டு மெதுவாய் ஆரம்பித்தோம் நடை பயணத்தை !

காலை 7 மணியளவில் நடக்க ஆரம்பித்தோம். லும்லாங் எங்களுக்கு காட்டிற்குள் செல்ல, "வழிகாட்டி வேண்டியதில்லை" என்றும், "நீங்களாகவே பாதையில் சென்று வரலாம், ஏதேனும் சந்தேகம் வந்தால் வழியிலிருக்கும் கடைகளில் கேட்டுக்கொள்ளுமாறு தைரியமூட்டினார்". இல்லையெனில் வழிகாட்டியாக கூட்டிச் செல்வோருக்கு 200~500 ரூபாய் வரை தர வேண்டும். அனைவரும் மெதுவாய் நடக்க ஆரம்பித்தோம். அடர்ந்த காடுகள், அழகான பசுமையான படிக்கட்டுகள், அதிலுள்ள வழுக்காத பாசிகள், எதிரே வரும் கிராமத்து சிறுவர்கள், வண்டுகளின் ரீங்காரம் அதைவிட நண்பர்களுடன் அரட்டை என யாவும் ரசித்துக்கொண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டும் கடைசியாக நடந்து கொண்டிருந்தேன். ஆங்காங்கே கடைகள் மற்றும் வீடுகள் !


இதனால், காட்டிற்குள் "முழு பாதுகாப்போடு செல்கிறோம்" என உணர்ந்தோம். ஏறக்குறைய 30நிமிடங்களுக்கு பிறகு மர வேர்ப்பாலம் இருக்குமிடத்திற்கு அருகில் சென்றோம்.

அங்கு நுழைவு கட்டணமாக நபருக்கு 10 ரூபாய் கொடுத்துவிட்டு நகர்ந்தோம். அப்போது அங்கிருந்த பெண்மணி ஒருவர் கையில் ஒரு வண்டைப் பிடித்தவாறு எங்களிடம் வந்தார். இந்த வண்டு மிக சப்தமான ஒலிகளை வெகு நேரம் எழுப்பும் என விளக்கினர். நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து நேராக சென்று மரவேர் பாலத்தை நோக்கி சென்றோம். 15 நிமிடத்தில் அவ்விடம் வர பார்ப்பதற்கு அழகிய பசுமையான தொங்கு பாலமாகக் காட்சியளித்தது. அதில் நடப்பதற்கு ஏதுவாக மரப்பலகைகளால் நிரப்பி, ஒரே சமயத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கைப் பலகைகளையும் காண நேரிட்டது. அவ்வாறே ஒவ்வொருவராக எதிர்புறம் சென்று திரும்பி வந்தோம். கீழே 50 அடி ஆழத்தில் ராட்சத பாறைகளுக்கிடையே ஆறு ஓடிக்கொண்டிருந்தது வடிநீராக !


அரைமணி நேரத்திற்கு பிறகு, நேரம் காலை 10ஐ தாண்ட கிளம்பினோம் மற்ற இடங்களை பார்க்க !


சமதளத்தில் சில தூரம் சென்றோம். சில இடங்களில் பாறைகளின் அடியே குடைந்து பாதைகள் அமைத்திருந்தனர். பசி மெலிதாய் எட்டிப்பார்க்க கையில் வைத்திருந்த சிற்றுண்டிகளைச் சாப்பிட்டுக்கொண்டே சென்றோம்.



காட்டிற்குள் எங்களைப் போல் பலர் வந்து கொண்டும், நேற்று வந்து தங்கியவர்கள் இன்று எதிரே வந்துகொண்டிருந்தனர். பாவம் அவர்கள் எதிரே வரும் போது, ஏற முடியாமல் திணறிக்கொண்டு வந்தனர். நாமும் திரும்பி வரும் போது இந்த நிலைதான் என்று சிரித்துக்கொண்டு சென்றோம்.

இந்த நடைபயணம் ஒரு மலையிலிருந்து கீழே இறங்கி ,எதிரே உள்ள மலைக்கு ஏறி, மீண்டும் மூன்றாவது மலைக்கு பக்கவாட்டில் நடந்து செல்வதே. முதல் இரெண்டு மலைகளில் ஆங்காங்கே தங்கும் விடுதிகள் நிறைய உள்ளன. ஆதலால் நாம் இங்கு தங்கிக்கொண்டு, 2 நாட்களாகக் கூட சுற்றிப்பார்க்கலாம். முந்தய நாள் மேலேயே தங்கிவிட்டு, ஒரே நாளில் சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்புவது மட்டுமே எங்களது திட்டம் . ஆதலால் இன்று நாங்கள் மீண்டும் மேலே சென்று அறையைக் காலி செய்துவிட்டு மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டும்.

அப்போது தொங்கு பாலம் ஒன்று ஆற்றைக்கடக்க அமைக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க இரும்புக்கம்பிகளால் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. இந்த இடத்தில் அலைபேசி செயல்பட, அனைவரும் வீட்டிற்கு அழைத்தும் , வீடியோ கால் செய்தும் இவ்விடத்தைக் காட்டினோம். மீண்டும் நடக்க அடுத்த பத்து நிமிடத்தில் மற்றொரு தொங்குபாலத்தை காண நேரிட்டது.

இரும்புக்கயிறு, மரக்கட்டை, கம்பி வலை மற்றும் இரும்பு தகடுகளால் செய்யப்பட்டிருந்து. நடந்துகொண்டே இருந்தோம் ! இன்னும் எவ்வளவு தூரம் ? என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அரைமணி நேரத்தில் சிறிய கிராமம் வந்தது. ஒரு கடையில் எலுமிச்சை பானம் குடித்துவிட்டு களைப்பாறினோம். அண்ணன் பழனி, "அப்புறம், அப்டியே நடக்க ஆரம்பிக்கலாமா என்று கூற , எழுந்து நடந்தோம்.

கிராமத்தில் சிறுவர்கள் ஆனந்தமாய் நொண்டி விளையாட்டு விளையாட, பார்த்துக்கொண்டே சென்றோம். பத்துநிமிடத்தில் கிராமத்தின் எல்லை முடிய, வந்தது ஈரடுக்கு மரவேர்ப்பாலம். மீண்டும் நுழைவுக்கட்டணம், புகைப்படக்கருவி என நபருக்கு 20ரூபாய் கட்டிவிட்டு உள்ளே நுழைந்தோம் . நடுவே காட்டாறு, அதில் சிறியதோர் ஒரு அருவி, அதை இணைக்கும் ரப்பர் மரவேர்பாலம் இரெண்டு; இதுவே இவ்விடத்தின் இயற்கை எழில்.


நூறாண்டு பழமை என்றால் சும்மாவா ?


அருவியில் ஓட்டுமொத்த களைப்பையும் மறந்து குதித்து குளித்து மகிழ்ந்தோம். இங்குதான் நாங்கள் தமிழ் மக்களை அதிகமாக காண நேர்ந்தது. பிறகுதான் தெரிந்தது அவர்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள பிரபல நிறுவனத்தின் பணியாளர்கள் என்று ! ஒரே அலுவலகத்திலிருந்து கிட்டத் தட்ட 80பேருக்கு மேல் வந்திருந்தனர். அடுத்து ரெயின்போ அருவியை நோக்கி நடைபயணம் ஆரம்பித்தது.எங்கும் அருவிகள், காட்டாறு பசுமை மட்டும் கண்ணில் தெரிந்தது. சிறிது தூரம் சமதளமாக இருந்தாலும் பின்னே செங்குத்தாய் ஏறியது பாதைகள் !


படிக்கட்டுகளும் மறைந்தன. இடையே இரெண்டு பாலங்களைக் கடந்து ஆற்றின் பக்கவாட்டில் கரடு முரடான பாதையில் அடர்ந்த காட்டிற்க்குள் நடந்து சென்றோம்.



சரியாக ஒருமணிநேரத்தில் அருவியை அடைந்தோம்.

தூரத்தில் இருந்து பார்க்கு போது மூன்று அருவியாய்க் காட்சியளித்தது.

அருகில் செல்லும்போது அதன் பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம் தெரிந்தது. அப்படியே அருகிலிருக்கும் கடையில் அனைவருக்கும் மேகி சொல்லிவிட்டு, அருவியின் அழகில் மெய்மறந்து அமர்ந்திருந்தோம்.

ஒருமணி நேரம் அவ்வாறே செல்ல, மதியம் 2 மணிக்கு திரும்ப கிளம்பினோம். உடனடியாக அண்ணன் பழனிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட, அதைச் சரி செய்து மெதுவாய் நடக்க ஆரம்பித்தோம். வழியில் செல்லும் சென்னை வாசிகளிடம் பேசிக்கொண்டு, களைப்பாக நடந்து வந்து கொண்டிருந்தோம். மீண்டும் ஈரடுக்கு மரவேர்ப்பாலம் வந்ததும் குளிக்கத் தோன்றியது .


நண்பர்கள் அனைவரும் வரும் வரை குளித்து கொண்டு , ஆற்றில் இருந்த மீன்கள் எனது கால்களிடம் பேசிக்கொண்டிருந்தன. மீன்கள் தீண்டிய கால்கள் பற்களை கூசச் செய்தது !


நண்பர்கள் வர மீண்டும் பயணம் ஆரம்பித்தது. வரும் போது இறக்கமே அதிகமாய் இருந்தது. ஆதலால் இப்போது செங்குத்தான படிக்கட்டுகளில் ஏற வேண்டும். இன்னும் இருட்ட 3மணி நேரம் உள்ளது. அதற்குள் நாம் தங்கும் விடுதிக்குச் சென்று, அறையை காலி செய்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும்.

முஸ்தாக் படிக்கட்டு ஏற முடியாமல் கைகளை கால்களாக மாற்றி நான்கு கால் பாய்ச்சலில் நடந்தது சுவாரசியத்தின் உச்சக்கட்டம் !


செங்குத்தான படிக்கட்டுகள் இதயத்துடிப்பை அதிகரித்து வெளியே வந்துமிடும் அளவிற்குச் செய்தது! அப்போது ஒருவர் இரெண்டு இரெண்டு படிக்கட்டுகளாக ஏறிக்கொண்டிருந்தார். யார் என்று பேச்சுக்கொடுக்கும் போது, தெரிந்தது கேரளாவை சேர்ந்து ஜஸ்டின் என்றும் இந்தியாவை மிதிவண்டியிலே கடைசி 6 மாதங்களாக பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மறுசுழற்சி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக கூறினார்.

இருள் சூழ நண்பர்கள் அனைவரும் ஒவ்வொருவராய் நொந்து குலைந்து மேலே வந்து கொண்டிருந்தார்கள்.


பின்னர் அனைவரும் அறைக்கு சென்று லும்லாங்-கிடமிருந்து விடைபெற்றோம் !


மேகாலயாவில் கண்டிப்பாக பார்க்கக்கூடிய இடங்களில் இந்த தயர்னா கிராமம் முக்கியமான ஒன்று ! புகைப்படங்களே சொல்லும் அதன் எழிலை !

மழைக்காடுகளில் இந்த நடை பயணம், நுரையீரலில் காற்று நுண்ணறைகளை துரிதப்படுத்தி, குருதியின் கரியமில வாயுவை பிராண வாயுவாக உடலுக்களிப்பதை உணர முடிந்தது இந்த சுவாசத்தின் சுத்தத்தை !


நமது வாழ்க்கைமுறைக்கு, வருடத்திற்கு இருமுறை இவ்வாறான பயிற்சி தேவையே !


தொடரும் ...

85 views0 comments
bottom of page