top of page

பொழில் (1)

Updated: Jan 2, 2020


பொழில்" சற்று வித்யாசமாக இருக்கிறதே ? என்ன பொருள், என்று தோன்றுகிறதா ?


"அதிகமான மழைப்பொழிவைக் கொண்ட மழைக்காடுகள் " என்பது இதன் பொருள் !


உலகிலேயே ஆண்டிற்கு அதிக சராசரி மழைப் பொழிவைக் கொண்ட இடம் சிரபுஞ்சி. இது மேகாலயாவில் உள்ளது.


இந்த ஆண்டு நண்பர்களுடன் சிக்கிம் மற்றும் மேகாலயாவிற்குச் சுற்றுலா சென்று வந்ததால், பயணக்கட்டுரையின் தலைப்பு "பொழில்" என்றானது.


பண்டிகை நாள், அரசுவிடுமுறை, சனி மற்றும் ஞாயிறு இவற்றிற்க்கிடையே வரும் வாரநாட்களில் ஏதேனும் ஒருசில நாட்கள் விடுப்பெடுத்தால், தொடர் விடுமுறைக்குகான வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கும் கணங்கள் இனிமையான தருணேமே !


அவ்வாறான தருணங்களை, நண்பர்களோடு சேர்ந்து சுற்றுலாவிற்குத் திட்டமிட்டுக் காத்திருப்பது அதைவிட ஆவல் கூட்டும் ஒன்று !


நாங்களும் இதைப்போலவே, இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் நான்கு நாட்கள் மட்டும் விடுப்பு எடுத்தால், 11 நாட்கள் என்ற தொடர் விடுமுறைக்கு வாய்ப்பிருந்தது !


கடந்த ஆண்டு லே மற்றும் லடாக் சென்று வந்ததால், இந்த ஆண்டு வடகிழக்கு இந்தியாவைச் சுற்றிப் பார்ப்போமே என்ற எண்ணம் தோன்ற, நான்கு மாதங்களுக்கு முன்பே தோராயமான திட்டம் தயாரானது !


இந்த ஆண்டு வடகிழக்கு இந்தியாவில் சிக்கிம் , மேகாலயா, அஸ்ஸாம் மற்றும் பூட்டான் தேர்ந்தெடுத்து இறுதியாக சிக்கிம் மற்றும் மேகாலயாவை உறுதி செய்தோம்.


சென்னையிலிருந்து பாக்டோக்ரா (மேற்குவங்காளம் ) விமானத்தில் சென்று, அங்கிருந்து சிக்கிம் தலைநகர் கேங்டாக் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளை 5 நாட்கள் சுற்றிவிட்டு, அஸ்ஸாம் வழியாக மேகாலயா சென்று அங்கு 4 நாட்கள் மற்றும் அஸ்ஸாமில் 1 நாள் என பதினோராம் நாள் சென்னை திரும்புவதாகத் திட்டம் முடிவானது.


மொத்தம் 8 பேர். ஒரே நிறுவனத்தில் வேறு வேறு துறையில் வேலை பார்க்கும் நண்பர்கள். பழனிசாமி, அரவிந்த், சிவலிங்கம், முஸ்தாக், ஆதித்யன், சீனிவாசன் கிரிதரன் மற்றும் வைரமுத்து.


ஏறக்குறைய 3 மாதங்களுக்கு முன்னரே பழனி அண்ணன் சுற்றுலாவிற்குத் தேவையான அனைத்து முன்பதிவுகளையும் (விமானம், தங்கும் விடுதி, மகிழ்வுந்து) முடித்துவிட்டார்.


நாட்கள் மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது செல்லப்போகும் இடங்களைப் பற்றி இணையதளத்தில் பார்த்து மகிழ்ந்துகொண்டிருந்தோம். ஆம், இன்னும் சில தினங்களில் அந்தந்த பகுதிகளை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோசம் இருந்து கொண்டிருந்தது.


கடைசி இரு வாரங்கள் செல்வதே தெரியாமல், வேலைப்பளுவில் கரைந்து சென்றது. இறுதியாக பயண நாளுக்கு முந்தைய நாள், தேவையான பொருட்களை எடுத்து வைத்துவிட்டு தூங்கச்செல்ல நள்ளிரவைத் தொட்டது. மறுநாள் காலை 5.15 க்கு விமானம் !


குறைந்தது 4 மணிக்காவது அங்கு சென்றிட வேண்டும் ! ஆதலால் 2.30 மணிக்கு எழுந்து தயாராக சரியாய் இருக்கும் என நினைத்து தூங்கச்சென்றேன்.

நாள் 1 [சென்னை -கேங்டாக்]




மறுநாள் தூக்கம் கலைந்து எழுந்து பார்க்கும் போது, மணி காலை 6.00 ! திக்கென்றது மனது ! ஒரு நிமிடம் அத்தனை சுற்றுலாக்கனவுகளும் நொறுங்கிப் போயின. நண்பர்களிடமிருந்து காலை நான்கு மணியிலிருந்து ஏறக்குறைய 20 அழைப்புகள் ! அத்தனையும் மொபைலின் நிசப்தம் கொள்ளை கொண்டது !


"வடை போச்சே" எனும் தருவாயில் விக்கித்தவிக்கும் போது, கனவுகள் கலைந்து, மணி அதிகாலை 2.20 ஐ தொட்டுக்கொண்டிருந்தது.


2.30 க்கு அண்ணன் பழனியின் அழைப்பு வர, எடுத்துப் பேசினால் "என்ன தம்பி ரெடியா " என்றார். ரெடி ஆகிட்டே இருக்கேன்னே " என்று பதில் கூறிவிட்டு, ஓடினேன் குளிக்க !


பின்னர் தயாராகி, ஓலா வரவழைத்து விமான நிலையம் செல்ல மணி 3.45 ஆனது !


நான்கு மணியளவில் அனைவரும் வந்துவிட, உள்ளே நுழைந்தோம் செல்பி எடுத்துக்கொண்டே !


அனைவரும் இணையம் வாயிலாக ஏற்கனவே பயணத்தை உறுதி செய்து, இருக்கைகளை தேர்ந்தெடுத்துவிட்டதால், நேரடியாக பாதுகாப்புச் சோதனை செய்யுமிடத்தை அடைந்தோம்.


அனைத்தும் முடிந்து, காலை 5 மணியளவில் விமானத்தில் அமர்ந்து, புறப்படத் தயாரானது. சீனிக்கு இது முதல் முறை விமான பயணம். ஆதலால் ஏற்கனவே ரூ 160 செலுத்தி ஜன்னல் இருக்கை தேர்ந்தெடுத்திருந்தான். சரியாக 5.20 மணியளவில் விமானம் பறந்து சென்று காலை வேளை இரவை விழுங்கிக்கொண்டிருந்தது. நேரம் செல்லச்செல்ல விமானம் வங்கக் கடலின் வண்ணத்தை நீல வானில் ஊற்றி அதில் மேகமென்னும் தூரிகையால் சூரியன் வண்ணமிட்டுக்கொண்ருக்க, 800 கிலோமீட்டர் வேகமும் எங்களுக்கு மிதப்பதைப் போலிருந்தது.


சரியாக 8.00 மணியளவில் பாக்டோக்ரா விமான நிலையத்தில் தரையிறங்க, ஓடுபாதை நன்கு ஈரமாயிருந்ததால் வெகு நேரமாக அதிவேகத்தில் தரையிறங்கி ஓடிக்கொண்டிருந்தது. மோசமாக விமானத்தை தரையிறக்கியதால் சற்று பயம் தலைக்கேறி, இதயத்தை படபடக்க வைத்தது.


8.30 மணிக்கு வெளியே வர, "சில்லாங், காங்டோக் டாக்ஸி டாக்ஸி " "சில்லாங் காங்டோக் டாக்ஸி டாக்ஸி " ஆவோ ஆவோ பையா " என்று கூவல் போட்டுக்கொண்டு, எங்களை ஒரு சில கும்பல் வழிமறித்தது. நாங்களோ 8 பேர் ஆகையால் டாடா சுமோ மட்டுமே பொருத்தமானது. இங்குள்ள வாகனங்களில் 6பேர் மட்டுமே செல்லுமாறு இருந்ததது !


அதற்காக நாங்கள் சிலிகுரி நகரத்தின் உள்ள டார்ஜிலிங் டாக்ஸி நிறுத்தத்திற்கு வாகனத்தில் சென்றோம்.


வழியெங்கும் போக்குவரத்துக்கு நெரிசல், தூறல் மழை என ஏறக்குறைய 1 மணி நேரத்திற்கு பிறகு சென்றோம். அங்கு சென்றதும், மற்றொரு வாகன ஓட்டுநர் சிறிதுதூரம் எங்களை அழைத்துச் சென்று , ஒரு கடையில் விட , எங்கு செல்லவேண்டும் ? எத்தனை நாள் ? தங்கும் அறை என்ன விலையில் வேண்டும் ? அடையாள அட்டை கொடுங்க, (அதை வாங்கி , தள்ளாடும் நபரை கூப்பிட்டு நகல் எடுத்து வர அனுப்ப, அவரோ சில அடிதூரத்தில் அவ்வாறே பேந்த முழித்துக்கொண்டு நிற்க ) என அவர்கள் போக்கில் போக , அமைதியாய் நின்ற அண்ணன் பழனி , எல்லாம் முன்பதிவு செய்தாயிற்று ! கேங்டாக் போக வாகனம் மட்டும் வேண்டும்”, மத்ததெல்லாம் பந்த் கரோ " என்று கறாராய் நிற்க , அடையாளை அட்டை கைக்கு வந்தது.


"உங்களுக்காக வண்டி டாக்ஸி ஸ்டாண்டில் உள்ளது" எனக் கூற, வெளியே நடையைக் கட்டினோம்.


எங்களை பார்த்ததும் ஒரு திட்டமும், முன்பதிவு இல்லாதமாதிரி தெரிந்திருக்கும் போல அவர்களுக்கு !


பிறகு வாகனத்தில் மேலே உடமைகளை வைத்து கட்டி, சுமாரான டாடா சுமோவில் சிலிகுரி முதல் கேங்டாக் வரை பயணம் இனிதே ஆரம்பமானது காலை 10 மணிக்கு ! ஓட்டுநரிடம் காலையில் சாப்பிடவில்லை, வழியில் ஏதேனும் உணவகத்தில் நிறுத்துமாறு கூறினோம் . அவனோ, வண்டி இனி மதியம் 2 மணிக்கு மேல் தான் நிற்கும் என பதில் கூற, தூக்கி வாரிப்போட்டது. ஏன்டா ? ஏன் ? என்று வடிவேல் பாணியில் பார்த்தோம் ! அக்கணமே ஒரு கடையில் வலுக்கட்டாயமாக நிறுத்தி, நொறுக்கு தீனி மற்றும் குடிநீர் வாங்கிக்கொண்டு புறப்பட்டோம்.


நகரத்தை விட்டு வெளியேறி பின், இருபுறமும் தேக்கு மரங்கள் நிறைந்த அடர்ந்த, பசுமையான காடு. நடுவே மழையில் நனைந்த சாலையில் சீறிக்கொண்டு போகும் போதுதான் "யானைகள் நடமாடும் பகுதி" என்ற எச்சரிக்கைப் பலகையை பார்க்க நேர்ந்தது. பிறகுதான் தெரிந்தது அது மாகானந்தா வனவிலங்கு சரணாலயம் என்று ! இச்சரணாலயம் 1959-ல் காட்டுமாடு மற்றும் வங்கப்புலியைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டது.


யானைகள் ஏதும் தென்படுமா ? என பார்த்துக்கொண்டே சென்றோம் . 25 கிலோமீட்டர் சென்ற பிறகு அரைவட்ட வில் போன்ற ஒரு பாலம் நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்தது. என்னவென்று ஓட்டுனரிடம் கேட்க , பூட்டான் செல்லும் வழியெனக் கூறினார்.


இங்கிருந்து 130 கிலோமீட்டர் வலப்புறம் சென்றால் பூட்டான் நுழைவு வாயில் நம்மை வரவேற்கும் !


பிறகு டீஸ்டா நதியின் பக்கவாட்டிலே மீதப்பயணம் சென்றது. சில இடங்களில் நீரின் மேலே மேகங்கள் தவழ்ந்து கொண்டிருந்தது.


வழியில் மதிய உணவிற்கு சில இடங்களில் நிறுத்தினோம் . ஆனால் கடைகளில் சரியான உணவில்லாததால் 2 மணிக்கு மேல் ஓட்டுநர் ஒரு இடத்தில் நிறுத்தினார். பின்னர் ரொட்டி, சாப்பாடு, சிக்கன், தேநீர் என சாப்பிட்டுவிட்டு புறப்பட்டோம்.


தூக்கம் கண்ணைக்கட்ட அயர்ந்து தூங்க ஆரம்பித்தோம். ஏறக்குறைய மாலை 4 மணியளவில், கேங்டாக் நகரை அடைந்தோம். சிறிது போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது.



நாங்கள் காங்டாக் நகரில் நெட்டில் & பெர்ன் விடுதியில் தங்கினோம். மேல் தளத்தில் எங்களுக்காகவே 2 பெரிய அறைகள் இருந்தன. விடுதி முழுவதும் சிக்கிம் சுற்றுலா இடங்களை புகைப்படங்களை ஆங்காங்கே தொங்கவிட்டுருந்தது அழகிய தோற்றத்தைத் தந்தது. மேலும் வண்ண விளக்குகள், அறையின் வெளியே மொத்த நகரத்தையும் பார்வையிடுமாறு அமைந்த முற்றம் , தூய்மையான படுக்கை என மொத்தத்தில் 5 நட்சத்திர மதிப்பீடு வழங்குமாறு இருந்தது. அதைவிட விடுதி மேலாளர் குணமும் பண்பும் நன்றாக இருந்தது.




வெளியிலிருந்து வரும் வாகனங்களுக்கு தனி டாக்ஸி நிலையம்.


அவ்வாகனம் அங்கு வரை மட்டுமே செல்லும். நகரத்தில் செல்லுவதற்கு அங்குள்ள டாக்ஸிகளை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். அங்கிருந்து வெளியில் சுற்றி பார்ப்பதற்கு தனி வாகனத்தில் சென்றாக வேண்டும். ஆக இம்மூன்று வாகனங்கள் அவற்றிற்க்கான எல்லைகளுக்குள் மட்டுமே இயக்க வேண்டும்.

சொந்த வாகனத்தில் சென்றால் இவ்வாறான வரையறை இல்லை !


அன்றைய நாள் தூறல் மலையிட்டுக்கொண்டிருந்தது. நகரின் பிரதான மகாத்மா காந்தி சாலையில் உள்ள கடைகளை அலசி மாமூஸ், ரொட்டி, இன்னும் பிற உணவுகளை சாப்பிட்டு அங்கேயே சுற்றித் திரிந்தோம்.



இவ்வாறு முதல் நாள் சென்னை -பாக்டோக்ரா -கேங்டாக் என இனிதே முடிந்தது.


நாள் 2 [கேங்டாக்-லாச்சேன்]


இரெண்டாம் நாள் கேங்டாக்கிலிருந்து தும்லாங், மங்கன், சங்தங் வழியாக லாச்சேன் செல்ல 106 கிலோமீட்டர் பயணம் !


வழியில் தென்படும் இடங்களை போறபோக்கில் பார்த்துவிட்டு, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட ப்ளூ பைன் விடுதியில் தங்குவது மட்டுமே !

அதிகாலை 5 மணிக்கே எழுந்து குளித்து தயாரானோம் ஒரு சிலர் !


ஒட்டுமொத்தமாக காலை 7.30க்கு கிளம்பி, காலை உணவிற்காக விடுதியின் உணவகத்தை அடைந்தோம் தரைதளத்திற்கு கீழே !


உணவகமும் அருமையான வேலைப்பாடோடு அமைந்திருந்தது. மெல்லிய இசையில் சீனப்பாடல் போன்று பாடிக்கொண்டிருந்தது. காலை உணவிற்கு பிரட், ஜாம், ஆம்லெட், பழங்கள், தேநீர், அவல், கேக், பிரட் சாண்டுவிச் என வெளுத்து வாங்கினோம்.


காலை உணவை முடித்துவிட்டு தங்கும் விடுதியில் உடமைகளை எடுத்துக்கொண்டு லாச்சேன் செல்லத் தயாரானோம். அங்கிருந்து வாடகை வண்டியில் சென்று வஜாரா டாக்சி நிலையத்தை அடைந்து காத்திருந்தோம். ஏற்கனவே தங்கும் விடுதியின் மூலம் லாச்சேன் மற்றும் லாச்சங் செல்ல அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தோம். சரியாக அரை மணி நேரத்தில் அனைத்தும் கிடைக்க பயணம் ஆரம்பமானது. மூன்று பகல் இரெண்டு இரவு பயணத்திற்கு தயாராகி தலைநகரத்தை விட்டு வடமேற்கில் பயணம் தொடர்ந்தது.


ஏறக்குறைய 20கிலோமீட்டர் அடைந்தவுடன் அழகிய அருவி தென்பட, சற்றுநேரம் இறங்கி அருவிக்கருகே புகைப்படங்கள் எடுத்தோம்.





பின்னர் நூடுல்ஸ் சாப்பிட்டுவிட்டு வாகனம் கிளம்பியது. வழியெங்கும் அருவிகள் ! செங்குத்தான மலைகளும் அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில வீடுகள். வழியில் சேரும் சகதியுமென, வாகனங்கள் ஏறமுடியாமல் சிக்கித்தவித்தன. மதியம் ஆக ஆக பசி கிள்ளியது .


மங்கன் என்னுமிடத்தில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என நினைத்து சென்றோம். அங்கு செல்லும் போது ஏதும் சரியான உணவகங்கள் இல்லாததால் ஏமாற்றமே மிஞ்சியது. எஞ்சிய கடைகளில் மாட்டிறைச்சி பிரியாணி கிடைக்க மங்கனை புறக்கணித்தோம்.


மேயங் என்னுமிடம் வர சாலையோரக் கடையில் வண்டியை நிறுத்தினோம். சாப்பிட நூடுல்ஸ் சொல்ல, அருகிலிருந்த அவர்களது வீட்டில் வேலை தீவிரமாக நடந்தது. சரியாக அரைமணி நேரத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் சூடாக வந்தது நூடுல்ஸ் !



சாப்பிட்டு கிளம்ப வெகு நேரமாகியது. நேரம் செல்ல செல்ல இருட்டும் வர தொடங்கியது. வழியில் நாகா அருவியை வண்டியிலிருந்தே ரசித்துவிட்டு சென்றோம். இறுதியாக சங்தங் என்னுமிடம் வர அங்கிருந்து இடதுபுறமாக பிரிந்து சென்றோம் லாச்சேன் செல்ல. வலதுபுறம் சென்றால் லாச்சங்.


நன்றாக இருள் சூழ ஆரம்பித்தது. எதிரே வரும் வாகனங்கள், அங்கு செல்ல முடியாது, ஒரு மணி நேரமாக வாகனங்கள் நின்று கொண்டிருக்கிறது என கூறிவிட்டு செல்ல பக்கென்றது எங்களுக்கு !


ஏனென்றல் இங்கு தங்குவதற்கு விடுதிகள் கூட ஏதுமின்றி காணப்பட்டது. சென்று பார்ப்போம் என்று மீண்டும் பயணத்தைத் தொடங்க மழை ஆரம்பமானது. சில நிடங்களில் வலதுபுறம் காட்டாற்று வெள்ளம் ஆரவாரத்துடன் செல்ல, இடதுபுறம் சமீபத்தில் நிலச்சரிவடைந்ததை பாறைகளும், மோசமான பாதைகள் பீதியை ஏற்படுத்தின. தூரத்தில் வாகனங்கள் நிற்பது மெல்ல தெரிய வந்தது. கிட்டத்தட்ட 20 வாகனங்கள் எங்களுக்கு முன்னே நிற்க என்னவென்று பார்க்க இறங்கி முன்னே சென்றோம். சிலர் ராணுவ அதிகாரிகளிடம் கேட்டு கொண்டிருந்தனர். எப்போது விடுவீர்கள் என. அவரோ எனக்கு உத்தரவு வரவேண்டும் என கூற அமைதியாய் காத்திருந்தோம். சிலர் சலசலப்போடு பேசிக்கொண்டிருக்க பிறகுதான் காரணம் புரிந்தது. பொதுமக்கள் செல்லும் சாலையானது மழையின் தாக்கத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்கிறது. அதைச் சரி செய்ய இன்னும் சில மாதங்கள் ஆகலாம். ஆதலால் சுற்றுலா பாதிக்கப்படாதவாறு மாற்று வழியில் விடுகின்றனர். அம்மாற்றுவழியானது ராணுவ முகாமுக்குள் நுழைந்து செல்லுமாறு இருக்கிறது. ஆதலால் அவர்கள் வாகனத்தை எப்போதும் விடாமல் வாகனங்கள் சேரச் சேர அனுமதிக்கின்றனர்.


அரைமணி நேர இடைவெளியில் வாகனங்கள் செல்லலாம் என கூற ஆரவாரத்துடன் கிளம்பியது அனைத்து வாகனங்களும்! சேரும் சகதியுமாக வழியில் ராணுவ முகாமுக்குள் குலுங்கிச் சென்றது. துப்பாக்கி ஏந்திய ராணுவவீரர்கள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர்.


ஏறக்குறைய இரவு 8 மணியளவில் தங்கும் விடுதியை அடைந்தோம் . குளிர் வாட்டியெடுத்தது. சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு இரவு உணவை சாப்பிடச் சென்றோம். ரொட்டி சாதம் காய்கறி இனிப்புகள் என தேவையான அனைத்தும் இருந்தன.



திருப்தியாக சாப்பிட்டுவிட்டு அறைக்குச் சென்றோம். பயணக்களைப்பு தூக்கத்தை தானாய் அழைத்து வர இரண்டடுக்கு போர்வைக்குள் உறங்கினோம். மூன்று அறையென்பதால் 8 பேரும் தாராளமாக உறங்கினோம்.


காலை 5மணிக்கே நன்றாக வெளிச்சம் வந்ததால் எழுந்து குளித்து தயாரானோம். விடுதிக்கு பின்புறம் அகலபாதாளத்தில் லாச்சன் நதி உருகிய பனிமலைகளை பனியாறுகளாக ஓட விட்டுக்கொண்டிருந்தது.


அனைவரும் கிளம்பி காலை உணவை பொட்டலப்படுத்தி வாகனம் கிளம்ப மணி ஏழானது ! இன்றைக்கு பார்க்கப் போகும் இடம் குருடோங்மர் ஏரி ! இங்கிருந்து 66 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஏரியை பார்த்துவிட்டு மீண்டும் இங்கு வந்து சங்தங் வழியாக லாச்சங் செல்ல வேண்டும். ஆதலால் கரடு முரடான சாலையில் செங்குத்தான மலைகளை கொண்டை ஊசி வளைவுகளோடு கடந்துகொண்டிருந்தோம். மக்களை காண்பதே அரிதாய் இருந்தது !


சாலையின் நிலைமை மிக மோசமாய் இருந்தது. குண்டும் குழியுமென இருந்துவிட்டால் கூட சரி சில இடங்களில் ஆயிரமடி பள்ளத்தில் விழும் அபாயமும் உள்ளது சாலை தடுப்பின்றி இருப்பதால் ! ஆதலால் ஓட்டுநர் கவனமுடன் வாகனத்தை செலுத்த நாங்கள் மலைகளை ரசித்துக்கொண்டே சென்றோம் .


ஏறக்குறைய 2 மணிநேரத்திற்கு பின்னர் "தங்கு" என்ற பள்ளத்தாக்கு இடம்வர அங்கு ராணுவ முகாம் ஒன்றிருந்தது. ராணுவ வீரர்கள் கடுங்குளிரிருளும் காலை உடற்பயிற்சிகள் மற்றும் மெதுவான ஓட்டத்தோடு கடந்துகொண்டிருந்தனர் எங்களை !


ஒரு உணவகத்தில் சாப்பிட நிறுத்தினோம். நாங்கள் கொண்டு வந்த கார அவலை வரும் வழியிலே காலி செய்தோம். ஆதலால் அனைவரும் இறங்கி நூடுல்ஸ் சொல்லிவிட்டு காத்திருந்தோம். வீட்டிற்கு வெளியே ஊசிப் பனிக்காற்று ! எங்களால் வெளியில் செல்லமுடியவில்லை. சிறிது நேரத்தில் நூடுல்ஸ் வர அனைவரும் பசியாறினோம்.



மீண்டும் வாகனம், ஏரியை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தது. செல்லும் வழியில் தூரத்தில் பனிமலைகள் தென்பட ஆரம்பித்தன.



ஆங்காங்கே ராணுவ முகாம்கள் பீரங்கிகளோடு தயார் நிலையில் இருப்பதைக் காணமுடிந்தது. ஏனென்றால் இது சீன எல்லைக்கு மிக அருகாமையில் (பத்துகிலோமீட்டர் ) இருப்பதால் மட்டுமே!


மீண்டும் செல்லும் வழியில் "கஃபே 15000" இடம் வர அனைவரும் இறங்கினோம்.


இங்கு ராணுவ முகாமும் உணவகமும் உள்ளது. சுற்றுலா பயணிகளும் இங்கு சென்று சாப்பிடலாம் .


மாமூஸ், பஜ்ஜி, ஜிலேபி என இருப்பதெல்லாம் கேட்டு வாங்கி சாப்பிட்டோம். சுவையான தேநீர் மற்றும் வெண்ணீறும் கிடைத்தது. விலையும் குறைவாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் பனியை தாங்கும் மேற்சட்டை, கையுறை என சில பொருட்களும் விற்கப்படுகிறது. நண்பர்கள் அதில் சில பொருட்களை வாங்கிக்கொண்டு வாகனத்தில் ஏறும் போது ராணுவவீரர்கள் சிலர் தமிழில் பேசிக்கொண்டு சென்றனர். அவர்களை சந்தித்துப் பேச ஆரம்பிக்க வேலூர், திருச்சி நெல்லை என்று அவர்கள் ஊர்களை கூறிக்கொண்டு அறிமுகமானார்கள்.


சிறிதுநேரம் பேசிவிட்டு மீண்டும் குண்டும் குழியுமான சாலையில் பயணம் தொடர்ந்தது. 30 நிமிடங்களுக்கு பிறகு நிறைய பனிமலைகள் தென்பட வந்தடைந்தோம் ஏரியை.


வாகனத்தை விட்டு வெளியே வர கொட்டியது மூக்கிலிருந்து நீர் !


ஆம் ஏறக்குறைய கடல்மட்டத்திலிருந்து 17800 அடி உயரம் !


இந்த உயரத்தில் சுவாசப்பிரச்சினை வரும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் லே பயணத்தில் கர்துங்லா அனுபவம் எங்களுக்கிருந்ததால் எளிதாகச் சமாளித்தோம்.


இது சீக்கிய, புத்த மற்றும் இந்துக்களின் புனித ஏரியாகக் கருதப்படுகிறது. உறைபனி காலங்களிலும் ஏரியின் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் நீர் உறையாமல் இருக்கிறது என்ற நம்பிக்கையும் இருக்கின்றது. எட்டாம் நூற்றாண்டில் புத்த துறவி அங்குள்ள மக்களின், குளிர் காலங்களில் குடிநீர் தேவைகளை போக்க, அவர் தொட்ட இடம் அவ்வாறானது என்ற கதைகளும் உண்டு. ஏறக்குறைய 5கிலோமீட்டர் நீளமிருந்தாலும் பனிமலைகள் அமைப்பால் குறைவான பகுதியையே காண முடிகிறது. வெண்பனி போர்த்திய கரிய மலையுடன் சேர்ந்த ஏரியின் அழகு காண்போரை அதிசயிக்க வைக்கிறது.


கடுங்குளிரிலும் நண்பர்கள் அரைக்காற்சட்டையில் சுற்றித்திரிந்து , புகைப்படம் எடுத்தும் வலம் வந்தார்கள் !



அரைமணி நேரத்திற்கு பிறகு மெதுவாய் நகர்ந்தோம் அவ்விடத்தை விட்டு. வாகனத்துக்குள் வந்த பிறகுதான் சற்று இதமாக இருந்தது.


மதிய உணவிற்காக காலையில் சாப்பிட்ட உணவகத்துக்கே மீண்டும் தஞ்சம் அடைந்தோம். மீண்டும் நூடுல்ஸ் மட்டுமே கிடைக்க, வெறுத்து போனோம். வேறு எதாவது இருக்கா ? எனக்கேட்க, அவர்களுக்கு வைத்திருந்த சாதம் மற்றும் தக்காளி தொக்கை கொடுத்தார்கள். "சிறிதளவு கொடுத்தாலும் போதும்" என நாங்கள் மூன்று பேர் மட்டும் சாப்பிட்டோம். இதனிடையே கடைக்கார பெண்மணி சானு, அண்ணன் பழனியிடம், "இதுவரை இங்கு வந்த சுற்றுலா பயணிகளை உங்களை போல் அரைக்காற்சட்டையோடு பார்த்ததில்லை" எனக்கூறினார்.


எங்களில் நான்கைந்து பேர் இவ்வாறிருக்க, மேலும் பேசிக்கொண்டிருந்தோம். அவ்வாரே அவர்கள் வீடும் உணவகமும் ஒன்றாயிருந்தததால் அங்குள்ள புகைப்படம் மற்றும் சில பதக்கங்களை பழனி அண்ணன் பார்த்துவிட்டு சானுவிடம் கேட்க, "மகன் கேங்டாக்கில் படிப்பதாகவும், அவன் கால்பந்து விளையாட்டில் வாங்கிய பதக்கங்கள்" எனக் கூறினார்.


இறுதியாக நங்கள் சாப்பிட்ட சாதத்திற்கு மட்டும் காசு வேண்டாமெனக் கூற அதிசயித்து போனோம் ! இருப்பினும் கணிசமான தொகையை கொடுத்துவிட்டு நகர்ந்தோம்.


மீதமுள்ள நாட்களில் பழனி அண்ணன் சாணுவைப் பற்றி பேசாத நாட்களில்லை !


வரும் வழியில் சாலை புதுப்பித்துக்கொண்டிருக்க, அரைமணிக்கும் மேலாக காத்திருந்தோம். அப்போது சாலையோர பூக்கள் பெரிதும் என்னைக் கவர்ந்தன. அதைப் புகைபடமெடுத்துக்கொண்டு நேரத்தைக் களித்தேன்.

மீண்டும் பிற்பகல் தங்கும் விடுதியை அடைந்து, உடமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். அவ்வாறு கிளம்பிய பிறகு, சீனியின் காலணிகளை மறந்து வைத்து வந்துவிட்டதாக கூறினான். மீண்டும் திரும்பி செல்லும் தூரமும் காலமும் எங்களிடம் இல்லை.


உடனடியாக விடுதிக்கு கூப்பிட்டு விவரத்தைக் கூற, அங்குதான் இருக்கிறது என்றனர். அவர்களிடம் நாளை மறுநாள் அங்கிருந்து கிளம்பும் ஏதாவதொரு வாகனத்தில் கொடுத்து விட ச்சொல்ல, அவரும் சம்மதித்தார்.


இத்தனையும் நடந்த பிறகு முஸ்தாக் அமைதியாக (பிரண்ட்ஸ் பட சார்லி பாணியில் ) "ஆமா நா பாத்தேன் . ஹோட்டல் செவுத்துல ஒரு சரவணா ஸ்டோர் கவர்ல ஷூ இருந்துச்சு" எனக்கூற சீனியின் முகம் வாடியது. "ஏன் ப்ரோ சொல்லிருக்கலாம்ல " என்றான். அதற்கு முஸ்தாக் "நீ வேணாம்னு வச்சுட்டு வந்தியோனு நினச்சு விட்டுட்டேன் "எனக்கூற வாகனமே சிரிப்பலையில் மிதந்தது !


இதுமாதிரியான தருணங்கள் பயணத்தை மேலும் சிறக்க வைக்கிறது. இதெல்லாம் குடுபத்துடனோ அல்லது தனியாகவோ செல்லும் போது நடக்க வாய்ப்பில்லை. இருப்பினும் மறுநாள் கேங்டாக் செல்லும் போது காலணிகள் கிடைத்தது. கொடுத்தவருக்கு 100 ரூபாய் கொடுக்க அவரோ மறுத்துவிட்டார் ! "அவ்ளோ நல்லவனாடா நீ" என வியந்துகொண்டே சீனி அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, முஸ்தாக்கை முறைத்தான் !


இரவு நேரம் மெல்ல ஆரம்பிக்க மீண்டும் நேற்று வந்த ராணுவ பகுதியில் காத்திருந்தோம். 30 வண்டிகளுக்கு மேல் எதிரே வந்த பிறகு, எங்களை அனுமதித்தனர். இரவு உணவிற்காக ஓட்டுனருக்கு தெரிந்த உணவகத்தில் மீன், முட்டை, சாதம், ரொட்டி என அனைத்தும் தயாரிக்க கூறிவிட்டோம். வாகனம் சங்தங் அடைந்து இடதுபுறம் சென்றது லாச்சங் செல்ல !


இரவு 9 மணியளவில் லாச்சங் செல்ல உணவகத்தில் தயாராயிருந்த உணவுகளை சாப்பிட்டோம். விலை சற்று அதிகமாகேவ இருந்தது. இறுதியாக தங்கும் விடுதியை அடைந்த தூங்கச் செல்ல மணி 10 ஆனது . போர்வை, கட்டில் அனைத்தும் துர்நாற்றம். பூஞ்சைகள் படிந்து மோசமாக காணப்பட்டது. ஏனென்று மேலாளரிடம் கேட்டால், குளிர் காலமென்பதால் துவைத்து காயவைக்க முடியவில்லை, அப்படி துவைத்து காயவைக்க கேங்டாக் அனுப்பவேண்டும் என்றார். பதில் மோசமாயிருக்க திட்டி தீர்த்து முனங்கியபடி தூங்கினோம்.


தொடரும் ...


103 views0 comments
bottom of page